சென்னை: தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காத மத்திய அரசைக் கண்டித்தும், நீட் தேர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில், அக்கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது மேடையில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, "2024-2025ஆம் நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மத்திய அரசு சமீபத்தில் தாக்கல் செய்தது. தமிழகத்திற்கு எந்தத் திட்டங்களோ, அறிவிப்புகளோ இந்த நிதி ஒதுக்கீட்டில் இடம் பெற்றவில்லை. ஆனால், பீகார் மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு பல்லாயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர்.
தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ஓரவஞ்சனையாக செயல்பட்டு வருகிறது. ஒரு கண்ணில் சுண்ணாம்பு, மற்றொரு கண்ணில் வெண்ணெய்யும் பூசுகின்றனர். தமிழகத்திற்கு 37 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கிட வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை மூலமாகவும், நேரில் சென்றும் பிரதமர் மோடியை வலியுறுத்தினார். ஆனால், இதுவரை மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி ஒதுக்கவில்லை.
தமிழக அரசு நிதிநிலை தாக்கல் செய்யும்போது தமிழகத்திற்கு தேவையான நிதி மற்றும் தேவைகளைப் பார்த்து பார்த்து செய்து வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக விளங்கி வருகிறது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். மேலும், திராவிட இயக்கங்கள் தவிர வேறு எவரும் தமிழ்நாட்டைக் கைப்பற்ற முடியாது. மைக்கில் சாவல் விடலாமே தவிர வேறு எவரும் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரமுடியாது. இந்தியா கூட்டணி 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறும்" என்று கூறினார்.
இதன் தொடர்ச்சியாக பேசிய அவர், "கர்நாடக அரசின் முன்னாள் மற்றும் இன்னாள் முதலமைச்சர்கள் கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட முயற்சித்தபோது எனது தலைமையில், மதிமுகவினரால் பல்வேறு போராட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்தப்பட்டது. மேலும், மேகதாது அணை கட்டினால் 48 டி.எம்.சி தண்ணீர் பாதிக்கப்படுவதால் தென் மாவட்டங்கள் முற்றிலும் பாதிக்கப்படும். எனவே, மேகதாது அணை கட்ட நாம் ஒருபோதும் விட்டுவிடக்கூடாது. அதற்காக நம் போராட்டம் தொடர்ந்து இருக்க வேண்டும்.
நீட் தேர்வைப் பொருத்தமட்டில், அனிதா முதல் இதுவரையில் 20 உயிர்கள் பலியானதற்கு காரணம் பாஜக தான். 20 பேர் உயிர் தியாகம் செய்தவர்கள் கட்சி சார்ந்தவர்களா? இல்லை, சமூகநீதிக்கு போராடி உயிர் தியாகம் செய்தவர்கள்தான் அவர்கள். இதுமட்டுமல்லாது, செபி நிறுவனத்தின் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: ரூ.24.5 கோடி நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதன் யாதவை தொடர்ந்து மேலும் இருவர் கைது!