திருச்சி: திமுக கூட்டணி கட்சி வேட்பாளருக்கான அறிமுக கூட்டமும், தேர்தல் பரப்புரை கூட்டமும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (மார்ச் 22) மாலை திருச்சியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டங்களில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
அப்போது அவர், "ஏகாதிபத்தியத்திற்கும், ஜனநாயகத்திற்கும் நடக்கின்ற தர்மயுத்தம் தான், இந்த நாடாளுமன்றத் தேர்தல். ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்ற கோஷத்தை வைக்கின்ற இந்துத்துவா சக்திகள் மற்றும் சனாதன சக்திகளின் கை ஓங்கிவிடக் கூடாது என்பதில், இந்தியா கூட்டணி தெளிவாகவும், வலுவாகவும் இருக்கிறது.
திராவிடம் மாடல் ஆட்சியை அனைத்து மாநிலத்திற்கும் முன்மாதிரியாக, எடுத்துக்காட்டாக நடத்தி வருகின்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழகத்தில் பிரச்சாரத்தை துவங்குகிறார். தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி (INDIA Alliance) வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
பாஜக தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தான், டெல்லி முதலமைச்சரான அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளது. தங்களின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் பாஜகவினர், அவர்களின் இந்துத்துவ அஜண்டாவை (Agenda) ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார்கள். முதலில் காஷ்மீரை துண்டு துண்டாக்கினார்கள். இப்போது, சிஏஏ (CAA) சட்டத்தைக் கொண்டு வந்து, இஸ்லாமியருக்கு கொடுக்க வேண்டிய உரிமையை மறுத்து வருகிறார்கள்.
மேலும், பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவரவும் முயற்சிக்கிறார்கள். ஆகவே ஜனநாயகத்திற்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும், சமதர்ம கொள்கைக்கும் நேர் விரோதமாக ஒரு கூட்டம், இன்று இந்தியாவின் பல இடங்களில் ஆட்டம் போட்டுக்கொண்டு இருக்கின்றன. ஆனால், தமிழகத்தில் அவர்களால் காலெடுத்து வைக்க முடியாது. இது பெரியார் பூமி, அறிஞர் அண்ணாவின் பூமி. இந்த தேர்தல் ஜனநாயகத்திற்கு உண்மையாக விடுக்கப்பட்ட சவால்.
இந்த தேர்தலில் திராவிட முன்னேற்றக்கழகம் தலைமையிலான இந்தியா கூட்டணி நிச்சயம் மகத்தான வெற்றி பெறும். எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காகத் தான் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளனர். பாஜக அனைத்தையும் செய்துவிட்டு, நடப்பதற்கு தங்களுக்கும் சம்மந்தம் இல்லை எனக் கூறுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளது.
கட்சியினரின் வற்புறுத்தல் காரணமாகவே, துரை வைகோ திருச்சி மக்களவை தொகுதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். இதில் எவ்வித வாரிசு அரசியலும் இல்லை" எனக் கூறினார். முன்னதாக, திமுக கூட்டணியில் திருச்சி மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ திருச்சி வந்திருந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், "எங்களைப் பொருத்தவரை ராகுல் காந்திதான் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர். என்னால் எவற்றையெல்லாம் நிறைவேற்ற முடியுமோ, அதைமட்டுமே நான் வாக்குறுதியாக கொடுப்பேன். அந்த வகையில், திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில், உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை உறுதியாக செயல்படுத்துவேன்" என்றார்.
இதையும் படிங்க: பொன்முடி விவகாரம்; முதலமைச்சர் முடிவே இறுதி..ஆளுநர் ஒத்துப்போக தான் வேண்டும் - துரை வைகோ - Governor RN Ravi In K Ponmudy Issue