திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த வடச்சேரி ஊராட்சியில், சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், வடச்சேரி ஊராட்சி மன்ற நிர்வாகம் முறையாக குடிநீர் வழங்குவதில்லை எனவும், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதனிடையே, இன்று (பிப்.1) திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடகரை பகுதியில் மேம்பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்க உள்ளார். அதற்காக அமைச்சர் எ.வ.வேலு வடச்சேரி வழியாக வடகரை கிராமத்திற்குச் செல்ல உள்ள நிலையில், வடச்சேரி ஊராட்சியில் உள்ள குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டி அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக பேனர் வைத்திருந்துள்ளனர்.
அதில், வடச்சேரி பகுதியில் குடிநீர் வேண்டியும், இல்லையென்றால் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் வடச்சேரி கிராம மக்கள் நேற்று இரவு பேனர் வைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, வடச்சேரி கிராம மக்கள் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக வைத்த பேனர் இரவோடு இரவாக காணாமல் போயுள்ளது. அதனைத் தொடர்ந்து, காலையில் பேனர் காணாமல் போனதால், வடச்சேரி கிராம மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.