சென்னை: மத்திய அரசு தேசியக் கல்விக் கொள்கையைத் திணிப்பதை எதிர்த்துத் தமிழ்நாட்டிற்கெனத் தனிப்பட்ட மாநிலக் கல்விக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு உருவாக்க முடிவு செய்தது. அதன்படி நீதியரசர் முருகேசன் தலைமையில் அமைத்த குழுவின் கல்விக் கொள்கை அறிக்கை அரசுக்குச் சமர்ப்பிக்கப்பட்டு, வெகு நாள்கள் ஆகிவிட்டதால் அதனை உடனே வெளியிட வேண்டும் என 'மக்கள் கல்வி கூட்டியக்கம்' வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து 'மக்கள் கல்விக் கூட்டியக்கத்தின்' ஒருங்கிணைப்பாளர்கள் முரளி வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதிய மாநில கல்விக் கொள்கை அறிக்கையை அரசுக்குச் சமர்ப்பிக்கப்பட்டு வெகு நாள்கள் ஆகிவிட்டன. ஆனால் அரசு இதுவரை அதை வெளியிடவில்லை.
மத்திய கல்வி கொள்கையை மாநிலம் மறைமுகமாக திணிக்கிறது: மாறாகக் கல்வித் தளத்தில் பல்வகைப் புதிய திட்டங்களை வேகமாகத் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. தேசிய கல்விக் கொள்கையை இந்தி, சமஸ்கிருத மொழித் திணிப்பிற்காக எதிர்ப்பது வரவேற்கத் தக்கது. ஆனால் தேசியக் கல்விக் கொள்கையின் பல திட்டங்களை மாநில அரசு மறைமுகமாக வெவ்வேறு பெயர்களில் நடை முறைப்படுத்தி வருவதாகப் பலராலும் குற்றம் சாட்டப்பட்டு வரும் வேளையில், தமிழக அரசு தனது நிலைப்பாட்டை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். எனவே அதற்காகத் தமிழ்நாட்டின் கல்விக் கொள்கையை அரசு உடனே வெளியிட வேண்டும்.
பல்கலைக் கழகங்களில் ஊழல்: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைகழகத்தில் பணி நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளது பற்றிய விசாரணைக்கு அதன் துணை வேந்தர் திருவள்ளுவன் தனக்கு ஒத்துழைப்பு நல்கவில்லை என்பதால் அவரைத் தமிழ்நாடு ஆளுநர் பல்கலையின் வேந்தர் என்ற தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்திப் பணி இடை நீக்கம் செய்துள்ளார்.
தமிழ்ப் பல்கலைக் கழகம் விவகரம்: தமிழ்ப் பல்கலைக் கழக ஊழல் பற்றி மட்டுமல்ல, தமிழகத்தின் பல் வேறு பல்கலைக் கழகங்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணி நியமனத்தில் பெரும் ஊழல் நடை பெற்றுள்ளதைப் பல ஆண்டுகளாகப் பல இயக்கங்களும், கல்வியாளர்களும் சுட்டிக்காட்டி வருகின்றனர். இது பற்றி ஆளுநர் இது வரை எந்தக் கவலையும் கொண்டதாகத் தெரியவில்லை.
திடீரென்று தமிழ்ப் பல்கலைக் கழக ஊழலை மட்டும் தட்டிக் கேட்க அவர் களம் இறங்கியுள்ளார். அதே போலத் தமிழ்நாடு அரசும் உயர்கல்விப் பரப்பில் உள்ள ஊழல்கள் மீது இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த அவலம் இன்றும் தொடர அனுமதித்து வருகின்றது.
இதையும் படிங்க: "மு.க.ஸ்டாலின் போன்று பிரகாச அரசியல் ஞான ஒளி நான் பெறவில்லை" - இராமதாசு பதில்!
பல்கலைக் கழகங்களிலும், அரசு உதவி பெறும் நிறுவனங்களிலும் காலிப் பணியிடங்கள் வந்துவிட்டால் அது நிர்வாகங்களுக்கு ஓர் அறுவடைக் காலமாக ஆகிவிடுகிறது. பல்கலைக் கழகங்களின் வேந்தர் என்ற அதிகாரத்தை ஆளுநர் பயன்படுத்தி அரசால் நியமிக்கப்பட்டத் துணை வேந்தரைப் பணி இடை நீக்கம் செய்துள்ளது. அது சரியா என்பது பற்றியும் தமிழ்நாடு அரசு கவலை கொள்ளவில்லை. பல்கலைக் கழக ஊழல்கள் பற்றி அரசு இப்படிக் கனத்த மெளனம் சாதிப்பதை மக்கள் கல்விக் கூட்டியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடம்: அரசுப் பள்ளிகளில் 20,000 ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. பாடப்பகுதிகள் முடிக்கப்பட வேண்டிய நிலையிலும் கூட, நிரந்தர ஆசிரியர் நியமனம் குறித்து எந்தத் தகவலும் இல்லை. பள்ளி மேலாண்மைக் குழுக்களின் மூலமாக 15 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் தற்காலிகமாகப் பணியாற்றும் அவலநிலையே நீடிக்கிறது. அதுமட்டுமின்றி 2 ஆயிரத்திற்கும் அதிகமான உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
அண்ணா பல்கலையில் தினக்கூலி: தமிழ்நாடு அரசின் அண்ணா பல்கலைக்கழகம் நவம்பர் 21ஆம் தேதி ஆசிரியர் பணியிடங்களைத் தவிர்த்து ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட ஆசிரியரல்லாத பணியிடங்கள் புறத்திறனீட்டம் திட்டப்படி, தினக்கூலி அடிப்படையில் நிரப்பப்படும் என மறு சுற்றறிக்கை அனுப்பியது. இந்த அறிவிப்பை மக்கள் கல்விக் கூட்டியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
கற்பிக்கும் பேராசிரியர்களைப் பல்கலைக்கழகத்தின் கல்வியாளர்கள் தேர்ந்தெடுக்கும் முறையை ஒழித்துக்கட்டி வெளிச்சந்தையில் உள்ள மனிதவளக் கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் தினக்கூலிகளாக நியமிக்க முடிவெடுத்த நிதிக்குழுவில் உள்ள தமிழ்நாடு அரசின் உயர் கல்வித்துறை மற்றும் நிதித்துறை அதிகாரிகளையும் மக்கள் கல்விக் கூட்டியக்கம் கண்டிக்கிறது.
ஒப்பந்த ஊழியர்களை, ஒப்பந்தப் பேராசிரியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். நிரந்தரமாக்கும் வரை அவர்களுக்கு நியாயமான சம்பளம் வழங்க வேண்டும் என ஊழியர்கள் சங்கங்களும் ஒப்பந்த ஆசிரியர், கவுரவ விரிவுரையாளர் சங்கங்களும், தமிழ்நாடு அரசிடம் முறையிட்டுள்ளதை அரசு நிறைவேற்ற வேண்டும் என குறிப்பிட்டிருந்தன.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்