தஞ்சாவூர்: மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, அவரது மனைவி கஞ்சன் உடன் இன்று ஹெலிகாப்டர் மூலம் கும்பகோணம் வந்தனர். முதலாவதாக, 108 திவ்ய தேசங்களில் ஒன்றான நாதன்கோயில் ஸ்ரீ செண்பகவள்ளி தாயார் சமேத ஜெகந்நாதப்பெருமாள் கோயிலுக்கு வந்தார். அங்கு அவருக்கு கோயில் சார்பில் நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள் முழங்க, பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து அவரை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதா, கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் ஆகியோர் வரவேற்றனர். பின் புனிதமான மகாமக திருக்குளத்திற்கு வந்த அமைச்சருக்கு, காசி விஸ்வநாதர் திருக்கோயில் சார்பில் பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: “பார்முலா 1 கார் ரேஸில் சில விலங்குகள் வந்தது கூட தெரியாத அறிவாளிகள்..” - அதிமுக மாஜி அமைச்சருக்கு உதயநிதி பதிலடி!
இதையடுத்து 3,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 165 கி.மீ நீளத்திற்கு 7 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் விக்கிரவாண்டி – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையை அமைச்சர் இன்று நேரில் பார்வையிட்டார். இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை திட்டப்பணிகளுக்கு பணம் ஒரு பொருட்டே அல்ல. ஆனால், தமிழக அரசு நிலம் கையப்படுத்தலையும், உரிய அனுமதிகளை தாமதம் இன்றி வழங்க வேண்டும்.
Union Minister Shri @nitin_gadkari Ji's public schedule
— Office Of Nitin Gadkari (@OfficeOfNG) September 12, 2024
🗓️ 13th September 2024 pic.twitter.com/wwwqnK71EC
தமிழகம், கர்நாடக மாநிலம் இடையிலான நதி நீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையிலான நதிகள் இணைப்புத் திட்டம் தயாராகவுள்ளது. இது விரைவில் செயல் வடிவம் பெறும். இதன் நிறைவில், கோதாவரியில் வீணாக கடலில் சென்று சேரும் 1,300 டிஎம்சி தண்ணீரை நாம் பயன்படுத்த முடியும்.
சென்னை - பெங்களுரூ விரைவு சாலை திட்டப்பணி நிறைவு பெறும் போது 2 மணி நேரத்தில் சென்றடையலாம். இதே போன்று ரூபாய் 17 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமையும் பெங்களுரு சுற்றுச்சாலையால் தமிழகம் பெரிய அளவில் பயன்பெறும். இதனால் சென்னை மற்றும் பெங்களூரு மாநகரங்களில் போக்குவரத்து நெரிசல் பெரும் அளவிற்கு குறையும்.
இன்று விக்கிரவாண்டி – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலைப் பணிகளை நேரில் ஆய்வு செய்தேன். இப்பணி 4 ஆண்டுகள் ஒரு மாதம் தாமதமாக நடைபெறுகிறது. இதற்கு பல காரணங்கள், இதனை அரசியலாக்க விரும்பவில்லை. தமிழகம் முன்னேறி வரும் மாநிலங்களில் ஒன்று, மாநில வளர்ச்சிக்கு நீர், எரிசக்தி, தொலைத்தொடர்பு வசதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தமிழகத்தில் அமையும் சாலைகள் தரமானவையாக உள்ளது. வரும் 2024 முடிவிற்குள் தமிழக சாலைகள் அமெரிக்க சாலைகளுக்கு இணையாக இருக்கும்.
தமிழகத்தில் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் வளர்ச்சி கண்டுள்ளது. தொடக்கத்தில் 7.5 லட்சம் கோடியாக இருந்தது. இதன் சந்தை தற்போது இந்திய அளவில் 22 லட்சம் கோடியாக உயர்ந்து, உலக அளவில் 3வது இடத்தில் உள்ளது. விரைவில் இந்தியா இந்த ஆட்டோமொபைல் தொழிலில் முதலிடத்திற்கு வரும் வாய்ப்புள்ளது, அதற்கு தமிழகத்தின் பங்கு முக்கியமானது.
எனது கனவுத் திட்டமாக இருந்த நதிகள் இணைப்பு திட்டம், அதாவது கோதாவரியில் 1,300 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் சென்று கலப்பதை தடுத்து, அதனை கிருஷ்ணா – பெண்ணார் - காவிரி என 49 திட்டங்களில் முதற்கட்டமாக ஆந்திர மாநிலத்திற்கு 60 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் முழுமை பெற்றால், தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும்” என்றார்.