திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி எம்.எஸ். பாவா மற்றும் நஸ்ரின் பர்மிஜா தம்பதியினரின் மகன் இசான் ஹமீஸ். இரண்டு வயது குழந்தையான இவர் இணையத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட லோகோக்களை 8 நிமிடம் 40 வினாடிகளிலும், 60 ஊர்களின் சிறப்புகளை இரண்டு நிமிடம் 42 வினாடிகளில் கூறி ஜெட்லி புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்துள்ளார்.
இந்த பதிவின் மூலம் உலக சாதனை பெற்று சூப்பர் ஹிட் சைல்டு (Super Hit Child) என்ற பட்டம் பெற்றுள்ளார். சாதனை பெற்ற குழந்தை இசான் ஹமீஸுக்கு கோப்பை, விருது மற்றும் சான்றிதழ்களை ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட் நிறுவனர் டாக்டர் டிராகன் ஜெட்லி வழங்கினார். ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட் நடுவர்கள் பாலசுப்பிரமணி மற்றும் ஜித்தேஷ் சோனி ஆகியோர் சாதனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடுவர்களாக பணியாற்றினார்.
இது குறித்து ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட் நிறுவனர் டிராகன் ஜெட்லி கூறுகையில், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் கூறியவாறு தற்போது ஒரு குழந்தை லோகோ மற்றும் ஊர்களின் சிறப்புகளை கூறி உலக சாதனை படைத்துள்ளார். இது நமது நாட்டிற்கு பெருமை தருவதாக உள்ளது என கூறினார்.
இசான் ஹமீஸின் பெற்றோர் கூறுகையில், “ஒரு வயதில் இருந்தே குழந்தைக்கு லோகோ கூறுவதில் விருப்பம் இருந்தது. அவருடைய நினைவாற்றல் திறனை அறிந்து உலக சாதனை புரிவதற்கு நாங்கள் தினந்தோறும் பயிற்சி கொடுத்தோம். அதன் அடிப்படையில் இன்று 100 லோகோக்கள் மற்றும் 60 ஊர்களின் சிறப்புகளை கூறி உலக சாதனை புரிந்தது பெருமையாக உள்ளது. இதே போல் ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகளின் திறனை கண்டறிந்து வெளிக்கொண்டு வரவேண்டும்” என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: யூடியூப் பார்த்து கீபோர்டு கற்ற திண்டுக்கல் சிறுவன்.. கண்ணைக் கட்டிக்கொண்டு இசைக்க முயற்சி! - Boy learned Keyboard via Youtube