சென்னை: துபாயிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று அதிகாலை எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் வந்தது. அந்த விமானத்தில் மிகப்பெரிய அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலையடுத்து, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளைத் தீவிரமாக கண்காணித்து பரிசோதனை நடத்தினர். அப்போது சென்னையைச் சேர்ந்த 2 பெண் பயணிகள் மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் சுற்றுலாப் பயணி விசாவில், துபாய்க்குச் சென்றுவிட்டு, இவ்விமானத்தில் திரும்பி வந்திருந்தனர்.
அதனைத்தொடர்ந்து, அப்பெண்களை நிறுத்தி சுங்க அதிகாரிகள் விசாரணை செய்துள்ளனர். அப்போது அந்த பெண்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியுள்ளனர். அதில் சந்தேகம் அதிகரித்ததால் பெண் சுங்க அதிகாரிகள் உதவியுடன், அந்த பெண் பயணிகளை தனி அறைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர். அப்போது அவர்களுடைய உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த பார்சல்களில், தங்கப் பசை இருப்பது தெரியவந்தது.
பின்னர், அந்த தங்கத்தைப் பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், மேலும் அந்த பெண் பயணிகளின் சூட்கேஸையும் திறந்து பரிசோதனை செய்தனர். அதற்குள் ரகசியமாக மறைத்து வைத்திருந்த தங்கக் கட்டிகளை கண்டுபிடித்த அதிகாரிகள் அதனையும் பறிமுதல் செய்தனர். அதையடுத்து, பெண் பயணிகள் உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த தங்கப் பசை மற்றும் சூட்கேஸில் வைத்திருந்த தங்கக் கட்டிகள் என மொத்தம் 10.3 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
அதன் சர்வதேச மதிப்பு ரூ.7 கோடி எனவும் கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து, தங்கத்தைப் பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள் அந்த இரு பெண் பயணிகளையும் கைது செய்து, தங்கத்தை இவர்கள் யாருக்காகக் கடத்தி வருகிறார்கள்? இந்த தங்கம் கடத்தலின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? எனப் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.