திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த உமாபதி மனைவி கவிதா (41). இவர் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு திருப்பத்தூருக்கு காய்கறி வாங்க வந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் காய்கறிகளை வாங்கிக்கொண்டு மீண்டும் வீட்டிற்குத் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையம் வழியாகச் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த தனியார் பேருந்து இவரின் இருசக்கர வாகனம் மீது மோதியதில் சம்பவ இடத்திலே கவிதா உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அறிந்த திருப்பத்தூர் நகர போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டுத் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல், திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியைச் சேர்ந்த சதீஷ் ஓட்டுநராகவும், கரூர் பகுதியைச் சேர்ந்த ரவி க்ளீனராக இருவரும் தனியார் டிரான்ஸ்போர்ட்டில் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னையிலிருந்து வீட்டு உபயோக பொருட்களை எடுத்துக்கொண்டு பெங்களூருக்குச் செல்ல நாட்றம்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பச்சூர் டோல்கேட் அருகே வந்த போது, சதீஷ் தூக்கக் கலக்கத்தில் திடீரென நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதியுள்ளார்.
இதில், க்ளீனர் ரவிசங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஓட்டுநர் சதீஷ் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகத் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: "எல்லாமே தேர்தலுக்கான அரசியல் தான்" - தமிழருவி மணியன் கூறுவது என்ன? - Tamilaruvi Manian Supports BJP