சென்னை: ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பிருந்தாவனம் அவென்யூ, செந்தில் நகர் பகுதியில் ஆரிக்கம்பேடு பகுதியைச் சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நகைக் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், சம்பவத்தன்று திடீரென கடைக்குள் புகுந்த முகக்கவசம் அணிந்திருந்த இருவர், ரமேஷ் குமாரை கையில் வெட்டி தாக்கிவிட்டு நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
இதில் வெட்டுக் காயமடைந்த ரமேஷ் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமுல்லைவாயல் போலீசார், காயமடைந்த கடை உரிமையாளரை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி, அதன் அடிப்படையில் கொள்ளை சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் விசாரணையில், நகைக்கடை உரிமையாளர் ரமேஷ் முறையான எந்த பதிலும் அளிக்காமல் முன்னுக்குப் பின் முரணாக கூறி வருவதால் எத்தனை சவரன் நகை கொள்ளையடிக்கபட்டது? கொள்ளையடிக்கபட்டது உண்மை நகையா அல்லது கவரிங் நகைகளா என கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனினும், அவரை போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும், அவரின் இருக்கைக்குப் பின்னால் ஒரு அரிவாள் தொங்கவிடப்பட்டுள்ளது. இதுவும் ரமேஷ் குமார் மீது போலீசாருக்கு சந்தேகத்தை வரவழைத்துள்ளது.
அதுமட்டுமின்றி, ரமேஷ் தீபாவளி ஃபண்டாக மாதம் 1,100, 2,200, 4,400 என பல்வேறு தொகைகளில் நகைச்சீட்டு நடத்தி வருகிறார். தீபாவளி நெருங்கி வருவதால் நகைக்கடை உரிமையாளர் ரமேஷ், தானே ஆட்களை வைத்து திருட்டில் ஈடுபட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
இதற்கிடையே, கொள்ளைச் சம்பவம் அரங்கேறிய நகைக் கடையில் ஆவடி மாநகர காவல் துணை ஆணையர் அய்மான் ஜமால் நேரில் பார்வையிட்டு, காவல்துறையினரை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கொள்ளை அடித்த நகைகளை மீட்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: “ஒரு தாய் ஸ்தானத்தில் இருக்கும் மம்தா ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?”- கொல்கத்தா விவகாரத்தில் குஷ்பூ ஆவேசம்!