சென்னை: சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநிலத் தலைமையகமான கமலாலயத்தில், பாஜக முன்னாள் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ மற்றும் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் கேசவன் ஆகியோர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அதில் பேசிய கேசவன், “கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை சம்பவம் நாட்டையே மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆனால், இதுகுறித்து தற்போது வரை மம்தா பானர்ஜி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும், தமிழ்நாடு முதல்வர், மேற்கு வங்க முதல்வரை இந்த விவகாரம் தொடர்பாக கண்டிக்க வேண்டும். முதல்வர் ஸ்டாலின் இந்தியா கூட்டணியில் மூத்த உறுப்பினராக உள்ளார். எனவே, இந்த விவகாரம் தொடர்பாக மம்தா பானர்ஜியை தொடர்பு கொண்டு நிச்சயம் பேச வேண்டும், இதுவே ஜனநாயக கடமையாகும்" எனக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய குஷ்பூ, "மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடந்த பாலியல் படுகொலை சம்பவம் கண்டிக்க வேண்டிய சம்பவம். மம்தா பானர்ஜி இந்தியாவிலேயே ஒரே பெண் முதல்வராக இருக்கிறார், மகளிருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அவர் செய்து கொடுத்து, மகளிரை பாதுகாப்புடனும், முன்னுரிமையுடனும் நடத்துவார் என எதிர்பார்த்த நிலையில், அவர் ஆளும் மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
மாநிலத்தின் ஒரு தாய் ஸ்தானத்தில் இருந்து கொண்டு தனது பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது மிகவும் வருத்தத்திற்குரியது. ஒரு பெண் வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவுக்கு துன்புறுத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டு இருக்கிறார். நிர்பயாவுக்குப் பிறகு இதுபோன்ற ஒரு விஷயத்தை பார்க்கும் போது, மேற்கு வங்கத்தில் உள்ள மம்தா பானர்ஜிக்கு எப்படி தூக்கம் வருகிறது என எனக்கு தெரியவில்லை.
அந்த பெண் இறந்த பிறகு, அந்த கல்லூரி கண்காணிப்பாளர் பெண்ணின் பெற்றோருக்கு அழைத்து உங்கள் மகளுக்கு உடல்நிலை சரியில்லை என கூறியுள்ளார், அதன் பிறகு இரண்டாவது முறையாக அழைத்து உங்கள் பெண் தற்கொலை செய்துவிட்டார் என சொல்லி இருக்கிறார். மேலும், பெற்றோரிடம் மருத்துவனையில் 3 மணி நேரம் கழித்தே உடலைக் கொடுத்துள்ளனர்.
நாய் கடித்தால் கூட அவரது உடலில் உள்ள காயம் போல இருக்காது. அந்த பெண்ணின் உடலில் 150 கிராம் விந்து இருந்ததாக உடற்கூராய்வு அறிக்கையில் தெரிவிக்கிறது. இது ஒருவரால் அரங்கேறி இருப்பது கிடையாது, இது கூட்டுப்பாலியல் வன்கொடுமையாக தான் இருக்கும்.
கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் பிரச்னையை வைத்து பார்க்கும் போது, மம்தா பானர்ஜி முதல்வராக தொடர வேண்டுமா? அதற்கான தகுதி இருக்கிறதா என்று தான் நான் கேட்பேன். அவர் உடனடியாக பதவி விலக வேண்டும். நேற்று 78வது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் போது, நேற்றைய முன்தினம் மேற்கு வங்கத்தில் 5,000 பேர் ஒருங்கிணைந்து உள்ளனர்.
அங்குள்ள 18 அறைகளை உடைத்து, இருக்கின்ற அனைத்து ஆவணங்களையும், ஆதாரங்களையும் சேதம் செய்துவிட்டனர். ஆனால் காவல்துறை இதனை தடுக்கவில்லை. மம்தா பானர்ஜி தங்களுக்கு பிரச்னை வந்துவிடும் என இவ்வளவு பேரை ஏவி விட்டுள்ளார்.
இது குறித்து கனிமொழி ஒரு டுவீட் கூட போடவில்லை, முதல்வர் ஸ்டாலின் ஒரு வார்த்தை கூட திறக்கவில்லை. ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் உறங்க நேரம் இருக்கிறது என பேசாமல் இருக்கிறாரா? சிபிஐ இந்த வழக்கை கையில் எடுத்த பிறகு தான் அரசு இதுதொடர்பாக காது கொடுக்கிறது.
தைரியம் இருந்தால் ராகுல் காந்தி இந்நேரம் மம்தா ஆட்சியில் தவறு நடக்கிறது என கூறியிருப்பார். பிரியங்கா காந்தி எங்கே இருக்கிறார்? திரிணாமுல் காங்கிரஸுக்கு எதிராக போய் தெருவில் உட்கார வேண்டியது தானே. அதேபோல், உத்தரகாண்டில் இன்று வெளியான செவிலியர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்த செய்திப் படி அந்த மாநில முதல்வரும் பதவி விலக வேண்டும்” எனத் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: கொல்கத்தா பெண் மருத்துவர் விவகாரம்; நடிகைகள் சமந்தா, ஆலியா பட் கடும் கண்டனம்!