நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த பஞ்சநதிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர், விவசாயி செல்லப்பா. இவரது மனைவி சவிதா. இவர்களுக்கு கடந்த 2007ஆம் ஆண்டு நிர்மல், நிகில் என்ற இரட்டை குழந்தை பிறந்தனர். இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒரே வகுப்பில் படித்தனர்.
இன்று 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில், கணக்கு பாடப்பிரிவு எடுத்து படித்த இந்த இரட்டையர்கள் இருவரும், 12ஆம் வகுப்பில் 478 மதிப்பெண்கள் என ஒரே மாதிரியாகப் பெற்றனர். ஒன்றாக பிறந்த இரட்டையர்கள் உருவத்திலும், செயலிலும் ஒன்றாக செயல்படுவதோடு, பொதுவான கருத்துகளையும் கொண்டவர்கள் எனக் கூறப்படுகிறது.
அதற்கு ஒருபடி மேலாக இந்த இரட்டை சகோதரர்கள், ஒரே மதிப்பெண் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பெற்று சாதனை படைத்துள்ளனர். ஒரே மதிப்பெண் பெற்றதால் இந்த இரட்டை சகோதரர்கள் மற்றும் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டை சகோதரர்களை பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.
இந்நிலையில், ஒரே பள்ளியில் ஒரே பாடப்பிரிவை எடுத்து படித்து 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றது குறித்து இருவரும் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது பேசிய செ.நிர்மல், 'ஒரே வகுப்பறையில் படித்தோம். அவ்வப்போது, நாங்கள் தேர்வில் ஒரே மாதிரி தான் மார்க் எடுப்போம். இந்த 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், நாங்கள் இருவருமே ஒரே மாதிரி மார்க் எடுத்துள்ளோம்.
டிகிரி முடித்து விட்டு நான் ஐஏஎஸ் தேர்வுக்கு படிக்க விரும்புகிறேன். அதேபோல, எனது சகோதரர் ஐபிஎஸ் ஆக வேண்டும் என ஆசைப்படுகிறார். நாங்கள் இருவருமே 478 மார்க் எடுத்துள்ளோம். இருவருமே ஒரே மாதிரியாக மதிப்பெண் எடுத்துள்ளது எங்கள் இருவருக்குமே மகிழ்ச்சியளித்துள்ளது' என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தேர்வின் போது இறந்த தந்தை.. துக்கத்திலும் 514 மதிப்பெண் எடுத்த மாணவி அனிதா! - TN Board Results