சென்னை: கடந்த 2019ஆம் ஆண்டு ஆந்திராவிலிருந்து, சென்னை வழியாக மதுரைக்கு காரில் கஞ்சா கடத்தி வருவதாக, சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவள்ளூர் மாவட்டம், காரனோடை சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்துக்கு இடமான முறையில், சென்னை பதிவெண் கொண்ட வெள்ளை நிற 'டொயோட்டா ஃபார்ச்சூனர்' காரிலிருந்து இறங்கிய நபர், அருகில் ஆரஞ்சு நிற வெஸ்பா டூவீலரில் இருந்த நபரிடம் பார்சல்களை கொடுக்க முயற்சித்தார்.
இதைப்பார்த்த போலீசார், இரு வாகனங்களையும் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது காரிலிருந்த பைகளில், மொத்தம் 303.3 கிலோ எடையுள்ள கஞ்சா இருந்தது தெரியவந்தது. பின்னர், கஞ்சாவை பறிமுதல் செய்து, போலீசார் சம்பந்தப்பட்ட நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், ஆந்திராவிலிருந்து கஞ்சா வாங்க பி.ரமேஷ் என்பவர் நிதியுதவி செய்தது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மதுரை மாவட்டம் செல்லூரைச் சேர்ந்த மனோகரன், தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த எம்.விஜயகுமரன், உத்தமபாளையத்தைச் சேர்ந்த டி.சந்திரன், சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த எல்.ரவி, மதுரை கே.புதுார் பகுதியைச் சேர்ந்த பி.ரமேஷ் ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணையின் போது சந்திரன் உயிரிழந்ததால், அவர் மீதான வழக்கு கைவிடப்பட்டது. மீதமுள்ள நான்கு பேர் மீதான வழக்கு விசாரணை போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற முதன்மை நீதிபதி சி.திருமகள் முன் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நான்கு பேர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி, அரசு தரப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்களுக்கு தலா 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும் விதித்துத் தீர்ப்பு வழங்கினார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு சின்னதிரை இயக்குநர்கள் சங்கத் தேர்தல்.. தலைவராகிறார் மங்கை அரிராஜன்! - Tamil Serial Directors Association