சேலம்: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகிற 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு 30 பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், கட்சியின் மாநாட்டு குழுக்கள் தொகுதி பொறுப்பாளர்களுக்கான அரசியல் பயிலரங்கம் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்தான கலந்தாய்வுக் கூட்டம் ஆத்தூரை அடுத்த அம்மம்பாளையத்தில் நேற்று நடைபெற்றது.
இதில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார். இதில் தமிழகம் மற்றும் புதுவையில் இருந்து நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர், நிர்வாகிகளிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “பெற்றோரைத் தவிர யார் காலிலும் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் விழக்கூடாது. தவெகவில் பதவி என்பது நிரந்தரமானது அல்ல. உழைப்பவர்களுக்கு எதிர்பார்ப்பு இல்லாமல் கட்சியில் அங்கீகாரம் வழங்குவார். இக்கட்சியில், நான் நிரந்தர பொதுச் செயலாளர் இல்லை. இப்பதவி விஜய் எனக்கு வழங்கியது. எப்போது வேண்டுமானாலும் இதை அவர் மாற்றலாம்.
இதையும் படிங்க: விஜயின் தவெக மாநாட்டிற்கு துபாய் நிறுவனம் பாதுகாப்பு... புஸ்ஸி ஆனந்த் சொன்ன தகவல்
நம்மை பார்த்துதான் மற்றவர்கள் அரசியலை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டை விஜய் எடுத்துள்ளார். மற்ற கட்சிகளுக்கு கூட்டத்தை கூட்ட இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே பணிகளைத் தொடங்க வேண்டும். ஆனால், தவெகவில் "தலைவன்" என்ற பெயரைச் சொன்னாலே அன்பான கூட்டம் கூடும். இந்த கூட்டம்தான் விஜயின் குடும்பம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்தப் பயிலரங்கத்திற்காக வைக்கப்பட்ட பேனர்களில், ‘நிரந்தர பொதுச் செயலாளர் ஆனந்த்’ என அச்சிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து ஆனந்த் இவ்வாறு பேசியுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்