சென்னை: அண்ணா பல்கலை கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் இன்று தான் கைப்பட எழுதிய கடிதமொன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.
அதில், '' அன்புத் தங்கைகளே, ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் தாய்மார்கள், என்னருமைத் தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்துத் தரப்புப் பெண்களுக்கும் எதிராக நடக்கும் 'சமூக அவலங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளைக் கண்டு உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும், சொல்லொணா வேதனைக்கும் ஆளாகிறேன். யாரிடம் உங்கள் பாதுகாப்பைக் கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனும் இல்லை என்பது தெரிந்ததே. அதற்காகவே இந்த கடிதம்.
அண்ணனாகவும், அரணாகவும் எல்லா சூழ்நிலைகளிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன். எனவே, எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழகத்தைப் படைத்தே தீருவோம். அதற்கான உத்தரவாதத்தை நாம் அனைவரும் இணைந்தே விரைவில் சாத்தியப்படுத்துவோம்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சென்னை தி. நகர் மேட்லி சாலையில் ஜெயின் மகளிர் கல்லூரி வாசலில் தமிழக வெற்றிக் கழக மகளிர் அணி சார்பாக, பெண் நிர்வாகிகள் விஜய் எழுதிய கடிதத்தை கல்லூரி மாணவிகளிடம் கொடுப்பதற்காக வந்தனர். அப்போது, கல்லூரி வாசலில் கூடியிருந்த கட்சியினரை, இங்கு அனுமதி இல்லாமல் துண்டு பிரசுரம் வழங்கக்கூடாது என மாம்பலம் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தி. நகர் பேருந்து நிலையத்தில், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கியதால் மாம்பலம் போலீசார் கைது செய்தனர்.
இதையும் படிங்க: பரங்கிமலை மாணவி கொலை; குற்றவாளியை சாகும் வரை தூக்கிலிட நீதிபதி உத்தரவு..!
இதையடுத்து கைதான அனைவரையும் தி. நகர் தெற்கு போக் சாலையில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்று தங்க வைக்கப்பட்டனர்.
இதனை அறிந்து தமிழக வெற்றிக் கழக கட்சியினர், விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் வழங்கினால் கைது செய்வீர்களா எனக் கூறி, பேருந்து முன்பு அமர்ந்து கோஷம் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும், கைதான தவெக கட்சி நிர்வாகிகளை சந்திக்க, தமிழக வெற்றிக் கழக மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மண்டபத்திற்கு வந்தார். கைது செய்யப்பட்ட தமிழக வெற்றிக் கழக கட்சியினரை சந்தித்து பேசிவிட்டு வெளியே சென்றார். அப்போது, மாம்பலம் போலீசார் அவரையும் கைது செய்து மண்டபத்திலேயே தங்க வைத்தனர். இதனால் போலீசாருக்கு எதிராக தவெக கட்சியினர் எதிராக கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து புஸ்ஸி ஆனந்த் உட்பட தவெகவினரை காவல்துறையினர் விடுதலை செய்தனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வெற்றிக் கழக மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துண்டு பிரசுரங்கள் கொடுத்ததற்காக கைது செய்ததை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார். இதனிடையே புஸ்ஸி ஆனந்த் கைது செய்யப்பட்டு அங்கு அமர்ந்திருந்தபோது, புருவத்தை உயர்த்தி பார்க்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.