தேனி: நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை முடிவடைந்த நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில், தேனி நாடாளுமன்ற தொகுதியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். இந்நிலையில், தேனி தொகுதியில் போட்டியிடும் தனது கணவர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக, அவரது மனைவி அனுராதா தினகரன், இரண்டாவது நாளாக பிரச்சாரம் மேற்கொண்டு, மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பெரியகுளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அம்மாபட்டி, மீனாட்சிபுரம், சக்கரப்பட்டி, சாவடிப்பட்டி, ஜல்லிபட்டி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று பிரச்சாரத்தை மேற்கொண்ட டிடிவி தினகரனின் மனைவி அனுராதா தினகரன், குக்கர் சின்னத்தில் வாக்களிக்கக் கோரி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
பிரச்சாரத்தில் பேசிய அனுராதா தினகரன், “தனது கணவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பொழுது எவ்வாறு செயல்பட்டுள்ளார் என்பது கிராம மக்களின் வரவேற்பிலிருந்து தெரிகிறது. 14 ஆண்டுகள் கழித்து திரும்ப வந்த நிலையில், எந்த ஒரு இடைவெளியும் இல்லாமல் அவர் மீது மக்கள் நீங்கள் காட்டும் பாசமும், பிரிவும் எங்களை திக்குமுக்காட வைத்துள்ளது.
மீண்டும் தன் கணவர் தேனி நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியின் வேட்பாளராக, குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார். 10 ஆண்டுகளாக அவர் மக்களுக்கு என்ன செய்துள்ளார் என்பது மனைவியாகிய என்னைக் காட்டிலும், மக்களாகிய உங்களுக்கு நன்றாக தெரிகிறது. எனவே, குக்கர் சின்னத்தில் வாக்களித்து மாபெரும் வெற்றி அடையச் செய்யுங்கள்.
தமிழ்நாட்டில் அதிக வாக்கு வித்தியாசத்தில், ஒரு ஓட்டும் சிந்தாமல், சிதறாமல் அவருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். உங்களது தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும். குக்கர் என்றால் டிடிவி, டிடிவி என்றால் குக்கர்” எனக்கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
முன்னதாக, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அனுராதா தினகரனுக்கு, அப்பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்து, திலகம் இட்டு வரவேற்பு அளித்துள்ளனர். மேலும், அங்கு வந்த பொதுமக்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.
இதையும் படிங்க: அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை.. எவ்வளவு தெரியுமா? - LPG Gas Cylinder Price