தேனி: தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பை பேரூராட்சியில் திருமலைராயப் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, இன்று (மே 19) சுவாமி திருமலைராய பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து விசேஷ பூஜைகள் நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து, பூதேவி ஸ்ரீதேவி அம்மன்களுக்கு சிறப்பு அலங்கார பூஜைகளை செய்து, திருமாங்கல்யத்தை அணிவித்து திருக்கல்யாணத்தை வெகு விமர்சையாக நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் ஏற்கனவே பிரமலைக்கள்ளர் சமுதாய முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்டது அரசு கள்ளர் பள்ளிகள். அது எந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டதோ, அதை மாற்றி அரசு கல்வித்துறையில் இணைக்கக்கூடாது என்பது பிரமலைக்கள்ளர் சமுதாய மக்களின் விருப்பம். அதை அரசு நிறைவேற்ற வேண்டும். அந்த எண்ணத்தை அரசு கைவிட வேண்டும்.
அரசு ஏற்கனவே விலைவாசியையும், வரியையும் அதிகமாக்கி கொண்டிருக்கிறார்கள். அரசாங்கத்திற்கு வருமானம் வேண்டும் என்பதற்காக, மக்கள் தலையில் வரிச்சுமையை ஏற்றுவது மிகவும் அபாயகரமான ஒன்று. இதற்கு தமிழக மக்கள் இந்த ஆட்சியாளர்களுக்கு நல்ல தண்டனையை வழங்குவர்.
போதைப் பொருள் பழக்கம் தமிழகத்தில் அதிகரித்துவிட்டது. தற்போது ஆளுகின்ற கட்சி, ஏற்கனவே ஆண்ட கட்சி நிர்வாகிகள் என அனைவருமே போதைப் பொருட்களை கடத்தும் அளவிற்கு சட்ட ஒழுங்கு கெட்டு கிடக்கிறது. இதற்கெல்லாம் தேர்தல் முடிவுக்குப் பின் நல்ல முடிவு கிடைக்கும்" என்றார். தொடர்ந்து, ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் சேர்வார் என்ற பேச்சு சென்று கொண்டிருக்கிறது என்ற கேள்விக்கு, "ஜோக்கரின் பேச்சுகளுக்கு நான் பதில் கூற மாட்டேன்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: “இது தனிமனித மீறல்..” ரோகித் சர்மா ஆத்திரத்தின் பின்னணி என்ன? - Rohit Sharma