திருச்சி: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே கண்ணனூர் பகுதியில் சமயபுரம் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் திருச்சி மாவட்டத்தின் ஆன்மிக தலமாகவும் விளங்குகிறது. இங்கு பல்வேறு பகுதியிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மாரியம்மனைத் தரிசிக்க வருகை தருவர்.
மேலும், சமயபுரம் மாரியம்மன் கோயிலானது தீராத நோய்களைத் தீர்க்கும் சிறந்த பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது எனப் பக்தர்கள் கூறுகின்றனர். இந்த கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் தங்கள் நோய்கள் குணமாக அக்னி சட்டி ஏந்தி அம்மனை வழிபடுவர்.
மேலும், கோயிலில் தைப்பூச திருவிழா, பூச்சொரிதல் விழா, ஆடிப்பூர திருவிழா, நவராத்திரி பெருவிழா, உள்ளிட்ட முக்கிய விழாக்கள் நடைபெறும். இந்த திருவிழாக்களில் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை புரிந்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி, காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி அம்மனை தரிசனம் செய்வர்.
அந்தவகையில், பக்தர்கள் கோயில் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணியானது கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில், உதவி ஆணையர்கள் முன்னிலையில் கோயில் மண்டபத்தில் நடைபெற்றது. இதில், தன்னார்வலர்கள், கோயில் பணியாளர்கள் மற்றும் வங்கி பணியாளர்கள் கலந்துகொண்டு காணிக்கைகளை எண்ணினர்.
அப்போது கடந்த 13 நாட்களில் கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் ரொக்கமாக ரூ. 1 கோடியே, 50 லட்சத்து 91 ஆயிரத்து 342 பணமும், 2 கிலோ 852 கிராம் தங்கமும், 4 கிலோ 250 கிராம் வெள்ளியும், 235 அயல்நாட்டு நோட்டுகளும், 1127 அயல்நாட்டு நாணயங்களும் கிடைக்கப்பெற்றன என கோயில் இணை ஆணையர் கல்யாணி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வீட்டில் வைத்து பிரசவம்: பரிதாபமாக பறிபோன தாய்-சேய் உயிர்! கேரளாவில் நடந்தது என்ன?