ஈரோடு: தாளவாடி அருகே சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது மரத்தை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
ஈரோடு மாவட்டம், தாளவாடி சுற்று வட்டாரப் மலைக்கிராமங்களில் இருந்து பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து இன்று (மார்ச் 5) காலை புறப்பட்டது. இந்த பேருந்தில் பொதுத்தேர்வும் எழுதம் மாணவர்கள் மட்டுமின்றி பிற மாணவர்களும் பயணித்தனர்.
இந்த நிலையில் தலமலை பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக, தொட்டாபுரம் காந்தி நகர் பேருந்து நிறுத்த சாலையின் குறுக்கே பெரிய மரம் முறிந்து விழுந்ததால், தற்போது போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல வேண்டும் என்பதாலும், பிற பேருந்து வசதியில்லாத காரணத்தாலும் பெரும் சிக்கல் நிலவியது.
சாலையில் கிடக்கும் பெரிய மரத்தை அப்புறப்படுத்தினால் மட்டுமே பேருந்து செல்ல முடியும் என்ற நிலையில் பள்ளி மாணவ, மாணவியர்கள் தவித்ததைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக மரத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்றும், பள்ளி மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுத உதவ வேண்டும் என்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.
பள்ளி மாணவர்களின் நிலைமையைக் கருத்தில் கொண்டு, மாணவர்கள் செல்வதற்கு மாற்று பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு, அப்பேருந்து மூலம் மாணவர்கள் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சாலையில் கிடக்கும் மரத்தை அகற்றுவது குறித்து தாளவாடி அரசு போக்குவரத்து கழக மேலாளரிடம் கேட்ட போது, மரத்தை அப்புறப்படுத்த பொதுப்பணித்துறையின் உதவியை கேட்டுள்ளதாகவும், பொதுமக்கள் உதவியுடன் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். தற்போது சாலையில் கிடக்கும் மரத்தை அறுத்து அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: மோடியின் முகமுடி அணிந்து வடை விநியோகம் செய்த திமுகவினர்.. ஈரோட்டில் நூதன பிரசாரம்!