திருநெல்வேலி: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி மண்டலம் சார்பில் புதிதாக ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை தனியார் மனிதவள மேம்பாட்டு நிறுவனம் நியமிக்க நேற்று டெண்டர் விடப்பட்ட சம்பவம் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
டெண்டர் விண்ணப்பம்: இந்த டெண்டர் விண்ணப்பம் ஜூன் 17-ஆம் தேதி காலை 11:00 மணி முதல் நெல்லை வி.எம்.சத்திரம் தமிழக அரசு போக்குவரத்துத் துறை அலுவலகத்தில் வழங்கப்படும் என்றும் இந்த ஒப்பந்த படிவத்தினை அடுத்த மாதம் 18-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே மத்திய அரசு தொடர்ச்சியாக அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தொழிற்சங்கங்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் தமிழக அரசின் போக்குவரத்து கழகத்தில் தனியார் நிறுவனங்கள் மூலம் ஆட்கள் நியமிக்கப்பட இருக்கும் சம்பவம் தொழிற்சங்கங்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை போக்குவரத்து கழகத்தில் 500க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கும் நிலையில் திடீரென, தனியார் நிறுவன மூலம் பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பதால் போக்குவரத்து கழகத்தை, தனியார் மையமாக்கும் முயற்சியில் அரசு இறங்கி இருப்பதாக தொழிலாளர்கள் அச்சப்படுகின்றனர். மேலும் இந்த அறிவிப்பின் மூலம் அரசு ஓட்டுநர், நடத்துநர் வேலையை எதிர்பார்த்து காத்திருக்கும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவாகும் சூழல் உருவாகியுள்ளது. எனவே தமிழக அரசின் செயலுக்கு தொழிற்சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சிஐடியு ஜோதி: இதுகுறித்து சிஐடியு நெல்லை மண்டல பொதுச் செயலாளர் ஜோதி ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "நெல்லை போக்குவரத்து கழகத்தில் தூத்துக்குடி, நாகர்கோவில், திருநெல்வேலி மாவட்டங்கள் உள்ளது. இந்நிலையில் தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர், நடத்துநர்கள் பணியமர்த்தப்படும் செய்தி மிகவும் வருத்தம் அளிக்கிறது. திமுக அரசு இதை கைவிட வேண்டும். விளிம்பு நிலை மக்களுக்கு இட ஒதுக்கீடு மூலம் வேலை வாய்ப்பு வழங்குவதால் தான் சமூக நீதி ஏற்பட்டு வருகிறது.
அதை சீர்குலைக்கும் விதமாக அரசு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதனால் இட ஒதுக்கீடு கேள்விக்குறியாகும். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஏற்கனவே சம்பள ஊதிய ஒப்பந்தத்தை மூன்று ஆண்டிலிருந்து ஐந்தாண்டுகளாக உயர்த்தி விட்டனர்.
விரைவில் போராட்டம்: தனியார் நிறுவனம் மூலம் அரசு வேலைக்கு பணியமர்த்தப்படும் திட்டத்தை ரத்து செய்வோம் என்று காங்கிரஸ் கட்சி கூறியது. இந்தியா கூட்டணி அமைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெரிதும் பாடுபட்டவர் எனவே அவர் இது போன்ற தனியார் நிறுவனத்திடம் இருந்து ஊழியர்கள் பணியமர்த்துவதை அனுமதிக்க கூடாது.
மத்தியில் மோடி அரசு அமைந்த பின்பு தான் தொழிலாளர் சட்டம் மாற்றப்படுவது, தனியார் நிறுவனங்களும் பணியமர்த்துவது போன்ற செயலில் ஈடுபட்டு வருகிறது. அதற்கு எதிராக அரசியல் களம் கண்டதால் தான் திமுக அரசு தமிழகத்தில் 40 இடங்களில் வெற்றி பெற்றது.
நெல்லை போக்குவரத்து கழகத்தில் மட்டும் 600க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. ஏற்கனவே நெல்லை போக்குவரத்துக் கழகத்தில் 350க்கு மேற்பட்ட பேருந்துகள் இயக்க முடியவில்லை. எனவே இதுபோன்ற திட்டங்களை தமிழக அரசு அமல்படுத்தினால் பாஜகவை ஆதரிக்கும் செயலாக மக்கள் மத்தியில் சென்று விடும். இதனை கருத்தில் கொண்டு மத்திய பாஜக அரசின் திட்டங்களை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும். தமிழக அரசின் இந்த நடவடிக்கை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்களுடன் ஆலோசித்து போராட்டம் நடத்துவோம்" என்றார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் மீண்டும் மினி பஸ்களை இயக்க தமிழ்நாடு அரசு திட்டம்; ஜூலை 14 வரை பொதுமக்கள் கருத்து கூற ஏற்பாடு!