மயிலாடுதுறை: கடலூர் மாவட்டம், பஞ்சாங்குப்பத்தைச் சேர்ந்த முகமது ஷகின், ஹரி, ஆகாஷ் ஆகிய மூவரும் நாகப்பட்டினத்தில் உறவினர் விழா ஒன்றில் கலந்து கொண்டு விட்டு, இன்று கடலூருக்கு ஒரே இருசக்கர வாகனத்தில் மூவரும் ஹெல்மெட் அணியாமல் சென்றுள்ளனர். அப்போது தரங்கம்பாடி பகுதியில் வந்து கொண்டிருந்த போது, தனியார் கல்லூரி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த தரங்கம்பாடியைச் சேர்ந்த ஸ்ரீதர் (48) என்பவர் மீது எதிர்பாராத விதமாக மோதியதில், 3 பேரும் நிலை தடுமாறி சாலையில் கீழே விழுந்துள்ளனர்.
அப்போது எதிரே செங்கலை ஏற்றி வந்த டிராக்டர், கீழே விழுந்த இளைஞர் மூவர் மீது ஏறியதில், மூவரும் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து, படுகாயம் அடைந்த மற்றொரு வாகனத்தில் வந்த ஸ்ரீதரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக பொறையார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த பொறையார் தீயணைப்பு மீட்புப் படையினர் மற்றும் போலீசார், இறந்த இளைஞர்களின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தலையில் அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்ட ஶ்ரீதர், மேல்சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அங்கு ஶ்ரீதர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக பொறையார் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: நாமக்கல் சிக்கன் ரைஸ் விவகாரத்தில் திருப்பம்.. பூச்சி மருந்து கலந்ததாக ஆய்வில் தகவல்!