சென்னை: நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்ற கூட்டத்தில், தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு, பட்டியலின அமைச்சரை விமர்சித்ததாக மத்திய அமைச்சர்கள் மற்றும் பா.ஜ.க எம்.பி-க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, டி.ஆர்.பாலு பொது இடத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று (பிப். 7) சென்னை விமான நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர் பாலு செய்தியாளர்களை சந்திக்கையில், அண்ணாமலை குறித்து கேள்வி எழுப்பியதற்கு, "அண்ணாமலை கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல நான் என்ன சீப்பாக போய்விட்டனா" என தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், "நாடாளுமன்ற அவையில் கேள்வி கேட்ட வரும் தலித் தான். நான் தலித்தை பற்றி எதுவும் தவறாக பேசவில்லை. நாங்கள் கேள்வி கேட்ட துறை அமைச்சர் பதில் சொல்லலாம் அல்லது துணை அமைச்சர் பதில் சொல்லலாம். தேவையில்லாமல் மீன்வளத் துறை துணை அமைச்சர் எல்.முருகன் இதற்கு பதில் அளித்து பேசினார்.
எனக்கு ஜாதி, மதம் கிடையாது. அனைத்து ஜாதி, மதமும் ஒன்று தான். அவர்கள் அரசியல் ரீதியாக அதற்கெல்லாம் நாங்கள் பதில் சொல்ல முடியாது. 65 வருடமாக நான் அரசியலில் இருக்கிறேன். முந்தாநாள் வந்த அண்ணாமலைக்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது. நான் 65 வருடமாக அரசியலில் உள்ளேன், சாதியை வைத்து அரசியல் செய்ய மாட்டேன்.
அண்ணாமலை பற்றிய கேள்விகள் என்னிடம் இதுக்கு அப்புறம் கேக்காதீர்கள். அண்ணாமலை தன்னடக்கத்துடன் பேச வேண்டும். ஒரு கட்சியின் தலைவராகிவிட்டால் என்ன வேண்டுமானலும் பேசலாமா. நாடாளுமன்ற அவையில் ஜாதியை பற்றி எந்த விவாதமும் நடைபெறவில்லை, தமிழ்நாட்டிற்கு நிதி கொடுக்காததை பற்றிய பிரச்சனை பேசப்பட்டு வந்தது.
நாடாளுமன்ற விதிமுறைகள் மத்திய இணை அமைச்சர் எல். முருகனுக்கு தெரியவில்லை, நான் பேசிவிட்டு உட்கார்ந்த பிறகு தான் அவர் பேசியிருக்க வேண்டும். இந்தக் கேள்விக்கும் உங்கள் துறைக்கும் சம்பந்தமில்லை என்று தான் கூறினேன். அதற்குப் பெயர் அன்பிட் இல்லை. எனக்கு இணையாக அரசியலில் இருப்பவர்கள் கேள்வி கேட்டால் நான் பதில் சொல்ல தயார் முந்தாநாள் அரசியலுக்கு வந்தவர்க்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது" என்று டி.ஆர் பாலு தெரிவித்தார்.
இதையும் படிங்க: அபுதாபியில் இந்து கோயில்; கும்பாபிஷேகத்தில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி!