சென்னை: டி.பி. சத்திரம் பகுதியைச் சேர்ந்த ரோகித் என்ற ரவுடியை டி.பி.சத்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கலைச்செல்வி தலைமையிலான தனிப்படை காவல் குழுவினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு ரோகித் கீழ்பாக்கம் பழைய கல்லறை பகுதியில் பதுங்கியிருந்தபோது, கலைச்செல்வி தலைமையிலான தனிப்படை பிடிக்கச் சென்றது.
அப்போது, ரோகித் அருகில் இருந்த பீர் பாட்டிலை உடைத்து தலைமைக் காவலர்கள் சரவணக்குமார், பிரதீப் ஆகிய இருவரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றார். அப்போது, உதவி ஆய்வாளர் கலைச்செல்வி தற்காப்புக்காக அவரை முட்டியின் கீழ் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தார். இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும், கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட ரவுடியை சுட்டுப் பிடித்ததற்காக உதவி ஆய்வாளர் கலைச்செல்வி, சென்னை போலீஸ் கமிஷனர் அருண் கையால் வெகுமதி அளிக்கப்பட்டு பாராட்டு பெற்றார்.
இந்த நிலையில், சென்னை டிபி சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேபாளத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மது போதையில் அவரது ஆறு வயது குழந்தையை அடித்து துன்புறுத்துவதாகவும், அரை நிர்வாணமாக நின்று கொண்டு அப்பகுதியில் செல்லும் நபர்களிடம் தகராறு செய்து அவர்களை தாக்க முயல்வதாகவும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் அடிப்படையில், டிபி சத்திரம் எஸ்ஐ கலைச்செல்வி சம்பவ இடத்திற்குச் சென்று நேபாள நாட்டுப் பெண்ணை இழுத்து அவர் மீது துணி போர்த்தி சமாதானம் செய்ய முயன்றுள்ளார். அப்போது, மது போதையில் இருந்த நேபாள நாட்டுப் பெண், எஸ்ஐ கலைச்செல்வி மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் கலைச்செல்வி முகத்தில் நகக் கீறல்கள் வீக்கம் ஏற்பட்டுள்ளது.
அதன் பிறகு சக காவல் துறையினர் கலைச்செல்வியை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எஸ்ஐ கலைச்செல்வி, இது குறித்து டிபி சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், மது போதையில் ரகளை செய்து எஸ்ஐ மீது தாக்குதல் நடத்திய நேபாளத்தைச் சேர்ந்த சீதா என்ற பெண்ணை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பஸ்ஸில் இனி சாதிய பாடல்களை ஒலிக்கச் செய்தால் ஓட்டுநர், நடத்துநர் கைது - திருநெல்வேலி காவல்துறை அதிரடி