தருமபுரி: கடந்த சில நாட்களாக தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லை பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை பெய்யத் தொடங்கிய மழை காலை வரை பெய்ததுள்ளது. இரவு முழுவதும் பெய்த மழை காரணமாக ஒகேனக்கல் பகுதியில் நீர்வரத்து திடீரென 19 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
முன்னதாக நேற்று (வெள்ளிக்கிழமை) ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 8 ஆயிரம் கன அடியாக இருந்து வந்த நிலையில், தற்போது 19 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது குறிப்படத்தக்கது. மேலும், சென்ற வாரம் கர்நாடக அணைகளில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால், ஒகேனக்கல் பகுதியில் நீர்வரத்து ஒரு லட்சம் கன அடிக்கு மேல் இருந்தது.
அதனை அடுத்து, கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டதன் காரணமாக 8 ஆயிரம் கன அடி என்ற அளவில் நீர்வரத்து காணப்பட்டது. மேலும் கர்நாடக அணைகளில் இருந்து இன்றைய நிலவரப்படி, கபினி அணையில் இருந்து 5 ஆயிரம் கன அடி தண்ணீரும், கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 10 ஆயிரத்து 965 கன அடி தண்ணீரும் என மொத்தம் 15 ஆயிரத்து 965 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
எனவே, இன்னும் சில தினங்கள் ஒகேனக்கலில் பகுதியில் நீர்வரத்து 15 ஆயிரம் கன அடிக்கு மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஒகேனக்கலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: நெல்லை வெள்ளம்: "இனி கவலை வேண்டாம்"- புது தொழில்நுட்பத்தை நெல்லை மாநகராட்சி அறிமுகம்!