தருமபுரி: கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கபினி அணைக்கு வரும் நீர் அளவு அதிகரித்ததால், கர்நாடக அரசானது அணையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு உபரி நீரைக் காவிரி ஆற்றில் திறந்துவிட்டுள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர் நேற்று முன்தினம் தமிழக எல்லை வந்தடைந்தது. இதனையடுத்து நேற்று நீர்வரத்து 19 ஆயிரம் கன அடியில் இருந்து 21 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து காரணமாக ஐவர் பாணி, ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது.
இதனையடுத்து சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஒகேனக்கல் மெயின் அருவி, ஆற்றங்கரை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்குத் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தடை விதித்துள்ளார். இதற்கிடையில் நேற்று முன்தினத்தில் இருந்தே ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 25 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக நீர்வரத்து மேலும் சற்று உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மெயின் அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கனமழை எதிரொலி: பவானிசாகர் அணை நீர்மட்டம் கிடுகிடு உயர்வு!