கும்பகோணம்: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்தின் இயக்குநராக இருப்பவர் மகேந்திரகுமார். இவர் ஊழியர்களை ஒருமையில் பேசி காயப்படுத்துவது, அனைத்து உத்தரவுகளையும் தன்னிச்சையாக வாய்மொழியாக மட்டும் போடுவது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதும், அதேபோல், கடும் கோடை காலத்திலும் அனைத்து நகர் பேருந்துகளையும் புல் சிப்டாக (முழு நேரம்) இயக்க வற்புறுத்துவது, நடத்துநர்களை முன் இருக்கையில் அமரக்கூடாது என தடுப்பது, தேர்தல் நடைமுறையைக் காரணம் காட்டி தொழிற்சங்க நிர்வாகிகளைச் சந்திக்க மறுப்பு தெரிவிப்பது உள்ளிட்ட நடவடிக்கையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதேநேரம், நடைமுறைகளுக்கு எதிராக பணி நிலைகளில் மாற்றம் செய்வது, மண்டல அலுவலகப் பிரிவுகளை இணைப்பது, உடல் நலக்குறைவால் மாற்றுப் பணியில் உள்ள ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு பணி வழங்காமல் நிறுத்தி வைப்பது, செய்ய முடியாத வேலையை செய்யச் சொல்லி நிர்பந்திப்பது மற்றும் முடிவில்லை என்றால் விஆர்எஸ் (விருப்பு ஓய்வு) பெற்றுக் கொள்ளுமாறு மிரட்டுவதாக போக்குவரத்து ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும், தொடர் மருத்துவ விடுப்பில் உள்ள தொழிலாளர்களுக்கு மருத்துவ விடுப்பு இருக்கும் போதே ஈட்டிய விடுப்பைக் கழிப்பது, ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களிடம் தரக்குறைவாகப் பேசுவது, டயர் சேதாரம், ஸ்பிரிங் பட்டை சேதாரத்திற்கு ஊழியர்களின் சம்பள உயர்வை நிறுத்துவது என பல்வேறு விதமாக தொழிலாளர்களுடன் சர்வாதிகாரியைப் போல நடந்து கொண்டுள்ளதாகவும் ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில்,இன்று (செவ்வாய்க்கிழமை) அனைத்து தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் மணடல தலைமையகம் முன்பு திரண்டு, மேலாண் இயக்குநர் மகேந்திரகுமாருக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி, பெருந்திரள் முறையீட்டில் ஈடுபட்டனர்.
இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதோடு, கடும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. இதனையடுத்து, போலீசார் வாகனங்களை மாற்றுப் பாதையில் அனுப்பி வைத்து, போக்குவரத்து நெரிசலை சீர் செய்தனர். இதனிடையே, மேலாண் இயக்குநர் மீது அரசு விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து சிஐடியூ மாநில தொழிற்சங்க நிர்வாகி மனோகரன் கூறும்போது, இந்த பெருந்திரள் முறையீடு நடைபெறுவதற்கு, மேலாண்மை இயக்குநர் தான் காரணம். இவரது நடவடிக்கை மனிதாபிமானம் அற்ற முறையில் உள்ளது. இவரது நடவடிக்கைகளைக் கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எண்ணூரில் தொடர் மின் வெட்டு.. பொதுமக்கள் திடீர் சாலை மறியலால் பரபரப்பு!