சென்னை: பொதுமக்கள் மற்றும் பல்வேறு தொழில் துறைகளுக்கு இலவச மற்றும் குறைந்த விலை மின்சாரம் வழங்க நடப்பு நிதியாண்டில் 15,332 கோடி ரூபாய் மானியத்தை மின் வாரியத்திற்கு விடுவிக்குமாறு தமிழக அரசுக்கு ஒப்புதல் அளித்து, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு வீட்டு இணைப்புகளுக்கு 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்கி வருகிறது. இதைத் தவிர்த்து விவசாயம், குடிசை வீடுகளுக்கு இலவசமாகவும் மின்சாரம் வழங்கி வருகிறது. அதேபோல, விசைத்தறி உள்ளிட்ட பிரிவுகளுக்குக் குறைந்த கட்டணத்திலும் வழங்கப்படுகிறது. இதற்காக மின் வாரியத்திற்கு ஏற்படும் செலவை, தமிழக அரசு ஆண்டுதோறும் மானியமாக வழங்குகிறது.
இந்த மானியத்தைக் கணக்கிட்டு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு, மின் வாரியம் அறிக்கை சமர்ப்பிக்கும். அதை மதிப்பீடு செய்து ஆணையம் மானிய தொகையை நிர்ணயிக்கும். இந்த நிதியை வழங்க அரசுக்கு உத்தரவிடும். அதன்படி, நடப்பு 2024 - 25ஆம் நிதியாண்டில், ரூ.15,332 கோடி மானியம் விடுவிக்கத் தமிழ்நாடு அரசுக்கு, ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதில், வீடுகளுக்கான மானியம் 7,225 கோடி ரூபாய், விவசாயத்திற்கு 6,780 கோடி ரூபாய், குடிசை வீடுகளுக்கு 346 கோடி ரூபாய், வழிபாட்டுத் தலங்களுக்கு 18.21 கோடி ரூபாய், விசைத்தறிக்கு 552 கோடி ரூபாய், கைத்தறிக்கு 13.67 கோடி ரூபாய், கூட்டுறவுச் சங்கங்களுக்கு 64 கோடி ரூபாய், தாழ் வழுத்தத் தொழிற்சாலைகளுக்கு 321 கோடி ரூபாய், இதர பிரிவுகளுக்கு 12 கோடி ரூபாய் அளிக்க வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மொத்த மானிய தொகை ஒவ்வொரு காலாண்டிற்கும் கணக்கிடப்பட்டு, நடப்பு காலாண்டிற்கான மானியத்தை, முந்தைய மாதமே அரசு வழங்க வேண்டும் என்றும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் சிறு குறு தொழிலாளர்கள், தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள், விசைத்தறி உரிமையாளர்கள் எனப் பல தரப்பினரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: டான்ஜெட்கோவின் ‘நெகிழ்வான வெளிப்புற பெல்லோ’ கருத்துக்கு காப்புரிமை! - TANGEDCO