திருநெல்வேலி: நெல்லையில் வியாபாரி சங்க கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "திருநெல்வேலியில் பாதாளச் சாக்கடை திட்டத்தை விரைவாக போர்க்கால அடிப்படையில் நிறைவு செய்யப்பட்டு சாலைகளை சீரமைக்க வேண்டும். வரக்கூடிய காலம் மழைக்காலம் என்பதால் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் வியாபாரிகள் அனைவரும் சிரமப்படக்கூடாது அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசுக்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு வலியுறுத்துகிறது.
அதேபோன்று ஆடுகள், மாடுகள் மற்றும் நாய்கள் போன்ற விலங்கினங்கள் சாலைகளிலே சுற்றித் திரிந்து கொண்டு போக்குவரத்துக்கு மிக இடையூறு செய்துவருகிறது. இதனை உடனடியாக திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டும்.
திருநங்கைகள் கடைகள் திறப்பதற்கு முன்பே, பணம் கேட்டு வியாபாரிகளைத் தொந்தரவு செய்து அநாகரிகமான செயல்களில் ஈடுபடுகின்றனர் என தமிழகம் முழுவதும் புகார் எழுந்துள்ளது. இந்த செயல்பாட்டைக் கட்டுப்படுத்த தமிழக முதல்வர் மற்றும் தமிழக காவல்துறை இயக்குநரிடமும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த புகார் மீது உறிய வேண்டும்.
அதேபோல, இரவு நேரக் கடைகளை முதலமைச்சர் 24 மணி நேரமும் திறக்க அனுமதி அளித்துள்ளார். ஆனால், 11 மணிக்கு உள்ளாக கடைகளை பூட்டுங்கள் என காவல்துறை அதிகாரிகள் அனைத்து மாவட்டங்களிலும் இடர்பாடுகளை ஏற்படுத்தி வருகின்றனர். எனவே காவல்துறை அதிகாரிகள் முழுநேரம் கடைகளை திறப்பதற்கு ஆவணம் செய்ய வேண்டும்.
மேலும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை எந்த கடைகளிலும் விற்பனை செய்யக்கூடாது என்று பேரமைப்பு வலியுறுத்துகிறது. இதுமட்டும் அல்லாது, கஞ்சா விற்பனை அதிகமாக உள்ள நிலையில், கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை போலீசாரிடம் காட்டிக் கொடுப்பவர்களை தாக்கக்கூடிய சம்பவம் நடைபெறுகிறது. ஆகவே, சட்டத் திருத்தம் செய்யப்பட்டு அரசு இது போன்ற செயல்களை கட்டுப்படுத்த வேண்டும்" என்று பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு முன்வைத்தார்.
மேலும் தொடர்ச்சியாக பேசிய அவர், "ஜி.எஸ்.டி-யில் உள்ள பல்வேறு இடர்பாடுகள் கலைய வேண்டும் என்பதை வலியுறுத்தி வரக்கூடிய வாரத்தில் மத்திய நிதி அமைச்சரை சந்தித்து முறையிட இருக்கிறோம். அப்போது, ஆன்லைன் வர்த்தகம் மற்றும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களால் சாமானிய வணிகம் அழிந்து கொண்டு வருவதை காப்பாற்ற வேண்டும் என்று அவரிடம் கோரிக்கையை முன்வைக்க உள்ளோம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் படுகொலையின் சட்ட நடவடிக்கைகள் முன்னுதாரணமாக அமைய வேண்டும்.. ஓபிஎஸ் பேச்சு!