சென்னை: தமிழ்நாடு அரசின் தொடக்க கல்வித்துறையில் பணியாற்றுவதற்கு ஆயிரத்து 768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு பிப்ரவரி 9ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தேர்வர்கள் பிப்ரவரி 14ஆம் தேதி முதல் மார்ச் 15ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்தனர்.
இவர்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வு (OMR BASED) கொள்குறி வகை முறையில், ஜூன் 23ஆம் தேதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஆசிரியர் தேர்வு வாரிய செயலளார் ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இடைநிலை ஆசிரியர் 2024ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு இணையவழி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய மார்ச் 15ஆம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விண்ணப்பதாரர்கள் பலரும் இணைய வழியாக விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய கூடுதல் கால அவகாசம் கேட்டதன் அடிப்படையில், இணையவழி மூலமாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய கடைசி தேதி மார்ச் 20ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்படுகிறது.
மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளவும் அவகாசம் கேட்டனர். அதன் அடிப்படையிலும், இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள விரும்பினால் மார்ச் 21ம் தேதி முதல் மார்ச் 23ம் தேதி வரை மாலை 5 மணி வரை திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், விண்ணப்பதாரர்கள் திருத்தங்கள் செய்யும் போது இணையவழி விண்ணப்பத்தை சமர்ப்பித்து தேர்வுக்கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மட்டுமே தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
விண்ணப்பதாரர்கள் தங்களது விவரங்களை திருத்தம் செய்து புதுப்பித்தவுடன் முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரைக்கும் உள்ள சமர்ப்பி- (Submit பொத்தானை அழுத்தி விண்ணப்பத்தில் செய்யப்பட்ட மாற்றங்களை உறுதி செய்யவேண்டும் அவ்வாறு செய்யவில்லை எனில் செய்யப்பட்ட மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
விண்ணப்பதாரர்கள் மாற்றங்களை செய்து விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின் அதில் எந்த மாற்றங்களையும் செய்யக்கூடாது. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் எந்தவொரு மாற்றமும் செய்யவில்லை எனில் முந்தைய தரவுகளே பரிசீலிக்கப்படும் விண்ணப்பதாரர்கள் கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (Email 1D) ஆகியவற்றில் மாற்றங்கள் செய்ய இயலாது.
இனம் (Community) மற்றும் மாற்றுத்திறனாளிகள் (PWD) சார்ந்த விவரங்களில் திருத்தம் இருப்பின் விண்ணப்பதாரர் செலுத்திய கட்டணத்தொகையில் ஏற்படும் மாற்றங்களுக்கு விண்ணப்பதாரரே பொறுப்பாவார்.
விண்ணப்பத்தில் கட்டணத்தொகையில் திருத்தம் செய்யும் போது குறைவாக கட்டணம் செலுத்த வேண்டியிருப்பின் விண்ணப்பதாரர் ஏற்கனவே செலுத்திய கட்டணத்தின் மீதித்தொகை திரும்ப வழங்கப்படமாட்டாது.
மேலும் இனிவரும் காலங்களில் திருத்தம் தொடர்பாக எவ்வித கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்படமாட்டது என அதில் கூறியுள்ளார். இவர்களுக்கான (OMR BASED) கொள்குறி வகை முறையில் ஜூன் மாதம் 23ம் தேதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. போட்டி எழுத்துத் தேர்வில் தகுதி ஒன்றில் தமிழ் மொழி தாள் தேர்வில் 30 கேள்விகள் 50 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும்.
அதில் தேர்வர்கள் 40 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும். பகுதி இரண்டில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா ,உருது, ஆங்கிலம் ,கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் ஐந்து பாடங்களில் இருந்து 150 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் தேர்வு நடைபெறும் வகையில் 150 கேள்விகள் கேட்கப்படும்.
மொழி பாடங்களில் தமிழ் அல்லது சிறுபான்மை மொழியில் ஏதாவது ஒன்றினை அவர்கள் பகுதி இரண்டு தேர்வு செய்து கொள்ளலாம். வினாத்தாளில் மொழி பாடத்திற்கான தேர்வுகள் அந்தந்த மொழிகளிலும், ஆங்கிலம் பாடத்திற்கான வினாக்கள் ஆங்கிலத்திலும், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடத்திற்கான வினாக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் இடம்பெறும்.
போட்டி எழுத்துத் தேர்வில் பெரும் மதிப்பெண்ணுடன் ஏற்கனவே ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருக்கும் ஆண்டுகளுக்கு ஏற்ப வழங்கப்பட்டுள்ள வெயிட்டேஜ் மதிப்பெண்களும் சேர்த்து தர வரிசை பட்டியல் வெளியிடப்படும். அதன் பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு தொடக்க கல்வித்துறை மற்றும் பிற துறைகளின் மூலம் நியமனங்கள் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
தேர்வின் போது எவ்வித முறைகேடுகளிலும் ஈடுபடக்கூடாது எனவும் அவ்வாறு ஈடுபட்டால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான மூவருக்கு பாஸ்போர்ட் பெறுவதற்கான நேர்காணல்!