சென்னை: பள்ளிக்கல்வித் துறையில் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் அரசின் நலத்திட்டங்கள், மாணவர்களின் கற்றல் திறன், ஆசிரியர்களின் கற்பித்தல் திறன், அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்புகள் மாணவர்களுக்கான வசதி பள்ளியின் நிலை உட்பட 77 நிலைகள் குறித்து 2022ம் ஆண்டு அக்டோபர் 10 ம் தேதி தனது ஆய்வை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி துவங்கினார் .அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் 233 தொகுதிகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் ,நூலகம் என ஆய்வுகள் மேற்கொண்டார்.
முதல்வர் தொகுதியில் ஆய்வு: 234வது தொகுதியாக முதலமைச்சரின் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜி கே எம் காலணி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மற்றும் மாநகராட்சி தொடக்கப்பள்ளியை பள்ளிகளில் விரிவான ஆய்வை மேற்கொண்டு மாணவர்களின் திறமைகளைப் பாராட்டி, ஆசிரியர்களிடம் தேவைகளை கேட்டறிந்தார்.
மேலும், கொளத்தூரில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் படைப்பகம் மற்றும் மாநகராட்சி பள்ளிகளையும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உடன் இணைந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமாெழி ஆய்வு செய்தார்.
பள்ளியில் வழங்கப்படும் காலை உணவின் தரத்தை கேட்டறிந்து, மாணவர்களுக்கு உணவுகளை வழங்கினார். அப்போது குழந்தைகள் தினத்தையொட்டி நேரு போல் வேடமணிந்த மாணவன் சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்து உரையாற்றியதை அமைச்சர் அன்பில் மகேஸ் பாராட்டி பரிசளித்தார்.
19,000 ஆசிரியர் பணி நியமனம்: அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், "பள்ளிக்கல்வித் துறை சார்பில் 7,500 கோடி மதிப்பில் 18 ஆயிரம் வகுப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. 6356 வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன. 234 தொகுதிகளிலும் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட அறிக்கையை முதலமைச்சரிடம் விரைவில் சமர்பிக்க உள்ளோம்.
மேலும் அரசுப் பள்ளிகளில் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருவதால் ஆசிரியர்களின் தேவை அதிகமாக உள்ளது. 2026 க்குள் 19000 ஆசிரியர்களை பணியமர்த்த உள்ளோம். அதில் தற்போது 3000 பேர் தற்போது பணியமர்த்தபட்டுள்ளனர். தருமபுரியில் தனது நண்பரை வைத்து வகுப்பு எடுத்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறைக்குதான் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது 44,442 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறைக்கு தனி பட்ஜெட் போட்டால் பயனுள்ளதாக இருக்கும்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் தனியார் பள்ளி மாணவிக்கு உடற்கல்வி ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகார் தொடர்பாக இரண்டு நாட்களுக்கு முன்பே பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டதுடன் இதற்கென குழு அமைக்கப்பட்டது.
பள்ளியிலிருந்து எந்த நிகழ்ச்சிக்காக வெளியில் சென்றாலும் பத்து குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் என்ற வீதம் ஆசிரியர் உடன் செல்ல வேண்டும். அது மட்டுமின்றி பெற்றோர்களின் அனுமதி பெற்றிருக்க வேண்டும், மாவட்ட ஆட்சியர் அனுமதியும் பெற்றிருக்க என்றும் அறிவுறுத்தி உள்ளோம்.
இலவச தொலைபேசி எண்கள்: 1417, 1098 என்ற இலவச தொலைபேசி எண்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன இதில் மாணவர்கள் அச்சப்படாமல் புகார் அளிக்கலாம். எந்த பயமும் வேண்டாம்; புகார் அளிப்பவர் ரகசியம் காக்கப்படும்" என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.
ஒரு தந்தையாக மகிழ்ச்சி: அண்ணாப் பல்கலைக்கழகத்தின் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையத்தின் சார்பில் பள்ளி மாணவர்களிடமும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கவிக்கும் வகையில் போட்டியை நடத்தியது. 8 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்கள் தங்களின் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர். 3 கட்டங்களாக நடைபெற்ற இப்போட்டியில் 36 குழுவினர் தேர்வு செய்யப்பட்டனர்.
பள்ளி மாணவர்கள், தொழில் முனைவோர்களாக மாறுவதற்கான சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு சான்றிதழ் வழங்கக்கூடிய நிகழ்ச்சி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இன்று காலை நடைபெற்றது அரசு பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்கள் சிபிஎஸ்இ மாணவர்கள் என்று ஏராளமான மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். அமைச்சரிடம் சான்றிதழ்களை பெற்ற மாணவர்களில் அமைச்சரின் இளைய மகன் கவின் குழுவினரும் அடங்குவர். ஆழ்வார்பேட்டையில் உள்ள இன்டர்நேஷனல் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் கவின், தனது தந்தை கையால் சான்றிதழை பெற்றுக் கொண்டார். அப்போது மகனின் தோளை தட்டி உற்சாகப்படுத்தி அமைச்சர் பாராட்டு தெரிவித்தார். மகனின் கண்டுபிடிப்புகள் ஒரு தந்தையாக எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறினார். மேலும் மாணவர்களின் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க வேண்டும் எனவும், கண்டுபிடிப்புகளுக்கு காப்பீடு பெறுவதற்கான வழிமுறைகளையும் அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் அமைச்சர் கூறினார்.