சென்னை: சென்னையில் சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்தப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும், இது சம்பந்தமாக விதிகள் வகுக்கக் கோரியும் ஸ்ரீகிருஷ்ண பகவத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வாகனங்கள் சட்டவிரோதமாக நிறுத்தப்படுவதைத் தடுக்கக் கொள்கை வகுக்கும்படி மாநகராட்சிக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அமர்வில் இன்று(ஏப்.22) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில், தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்துவதைத் தடுக்கும் வகையில் வரைவு கொள்கையை மாநகராட்சி வகுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாகத் தலைமைச் செயலாளர் தலைமையில் அதிகாரிகள் கடந்த 11ஆம் தேதி கூடி விவாதித்தனர். அதில், பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் வரைவு கொள்கை பல்வேறு துறைகளின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால், ஒப்புதல் கிடைத்த பின் மூன்று மாதங்களில் இந்த கொள்கை இறுதி செய்யப்படும் என அரசுத்தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், சட்டவிரோத வாகன நிறுத்தத்தைத் தடுக்கும் கொள்கையை வகுத்த பின், அதைக் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: பாஜகவின் குறுகிய நோக்கத்தை மக்கள் நிராகரிப்பார்கள்: சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் விளாசல்! - Lok Sabha Election 2024