கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் பிரவீன் மற்றும் சிலர் நேற்று இரவு கள்ளச்சாராயம் அருந்தியதாகக் கூறப்படுகிறது. இதில் சுரேஷ் மற்றும் பிரவீன் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்த நிலையில், 10-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் "கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டைமேடு அருகே உள்ள கருணாபுரத்தைச் சேர்ந்த 4 நபர்கள் கள்ளச்சாராயம் அருந்தி இறந்துவிட்டதாக செய்திகள் பரவி வருகின்றன. இது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை விசாரணையில் உடற்கூராய்வு முடித்து அறிக்கை பெற்று உண்மை நிலவரத்தை தெரிவிக்கும் வரை இது போன்ற செய்திகளை நம்பி மக்கள் அச்சமடைய வேண்டாம்" என தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி விமர்சனம்: இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் பக்கத்தில், "கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 5 பேர் உயிரிழந்ததாகவும் 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் வருகின்ற செய்திகள் கவலையளிக்கின்றன.
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விடியா திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் ஆறாய் ஓடுவதை தொடர்ச்சியாக நான் சுட்டிக்காட்டி வந்தும், இதனால் ஏற்கனவே பல உயிரிழப்புகள் ஏற்பட்ட பிறகும் கூட கள்ளச்சாராயத்தை ஒழிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
"கள்ளச்சாராயம் இல்லை- மெத்தனால்" என்று சொன்னது போல மக்கள் வாழ்க்கை விஷயத்தில் வார்த்தை விளையாட்டு விளையாடாமல், கள்ளச்சாராயத்திற்கு எந்த பெயர் இருந்தாலும் அதனை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்" என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்
இதையும் படிங்க: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: யார் யாருக்கு தபால் வாக்கு.. தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு!