சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. அதில் மானிய கோரிக்கை விவதாம் நடைப்பெற்றபோது, அமைச்சர்கள் தங்கள் துறையின் புதிய அறிவிப்புகளை வெளியிட்டனர். அப்போது, அமைச்சர் துரைமுருகன், இயற்கை வளங்கள் துறை சார்பில் புதிய 6 அறிவிப்புகளை பேரவையில் வெளியிட்டார். அவை,
- புவியியல் மற்றும் சுரங்க ஆணையர் அலுவலகத்தில் உள்ள வீதியில் ஆய்வகம் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்படும்.
- தமிழ்நாடு கனிம நிறுவனத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில், புதிய வணிக மேலாண்மை மென்பொருள் உருவாக்கி வாரிகளில் செயல்பாட்டினை துள்ளியமாக கண்காணிக்கவும், திறனாய்வு செய்யவும் புதிய திட்டங்களை தீட்டவும் ஏற்பாடு செய்யப்படும்.
- தமிழ்நாடு கனிம நிறுவனம் மூலம், வேலூர் மாவட்டம் மகிமண்டலம் சுரங்கப் பகுதியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் 3 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து சுற்றுச்சூழல் மேம்படுத்தப்படும்.
- தமிழ்நாடு கனிம நிறுவனம் மூலம் ராணிப்பேட்டை மாவட்டம் ரெண்டடி கிராமத்தில் 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம், 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேல்நிலை குடிநீர் தொட்டி அமைத்து தரப்படும்.
- தமிழ்நாடு கனிம நிறுவனத்தில் 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயற்கை நுண்ணறிவு திறனுடன் இயங்கக்கூடிய கண்காணிப்பு புகைப்படக் கருவிகள் கொள்முதல் செய்யப்படும்.
- தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தில் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
அமைச்சர் சி.வி.கணேசன் வெளியிட்ட அறிவிப்புகள்: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் புதிய 12 அறிவிப்புகளை அமைச்சர் சி.வி.கணேசன் வெளியிட்டார். அவை,
- தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள ஆயிரம் பெண் மற்றும் திருநங்கை ஓட்டுநர்கள் புதியதாக ஆட்டோ வாகனம் வாங்கும் செலவினத்தில், தலா ஒரு லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும்.
- பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு புத்தாக்கப்பயிற்சி 24.90 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.
- தொழிற்சாலைகளில் பயன்பாட்டில் உள்ள நவீன தொழில்நுட்ப யுத்திகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பாக 15 லட்சம் ரூபாய் செலளில் பயிற்சி வழங்கப்படும்.
- தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் நிர்வாக அலுவலகம் மற்றும் கணினி தொடர்பான வசதிகள் மேம்படுத்தப்படும்.
- தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அலுவலர்களுக்கு 29.65 லட்சம் ரூபாய் செலவில் மடிக்கணினிகள் வழங்கப்படும்.
- புதியதாக வளர்ந்து வரும் தொழில் வாய்ப்புகள் மற்றும் பிற தொழில் வாய்ப்புகள் குறித்து ஊடாடல் காணொலி காட்சிப்பதிவுகள் கல்வி தொலைக்காட்சி வாயிலாக ஒளிபரப்பப்படும்.
- 32 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள வகுப்பறைகளில் இணையதள வசதியுடன் கூடிய ஸ்மார்ட் டிவி வசதி 10.11 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தி தரப்படும்.
- அரசு தொழிற்பயிற்சி நிலைய விடுதிகளில் 92 இலட்சம் ரூபாய் செலவில் நூலகங்கள் அமைக்கப்படும்.
- தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்று வரும் மாணவர்களுக்கு 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம், நவீன தொழில் நுட்பங்களில் குறுகிய கால பயிற்சி அளிக்கப்படும்.
- குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, அவர்களின் தொழில் திறனை மேம்படுத்துவதற்கு 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி வசதிகள் செய்து தரப்படும்.
- தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு வழங்கப்படும் பயிற்சிக் கட்டணம் விரைவாக வழங்குவதற்காக இணையதள வசதி உருவாக்கப்படும்.
- தனியார் தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியாளர்களுக்கும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மரணம்: பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 5 லட்சம், மாதந்தோறும் 5 ஆயிரம்.. முதல்வர் அறிவிப்பு!