சென்னை: தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் அமைய உள்ள இந்தியாவின் 2வது ராக்கெட் ஏவுதளத்திற்கு கடந்த பிப்ரவரி 21ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த புதிய ராக்கெட் ஏவுதளத்துக்கு அருகே, விண்வெளி தொழிற்பூங்காவை (Space Industrial Park) கட்டமைக்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது தமிழ்நாடு அரசு. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் லிமிடெட் (TIDCO) அண்மையில் வெளியிட்டிருந்தது. முன்னதாக, இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பின் (ISRO) இன்ஸ்பேஸ் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொண்டுள்ளது. 2,000 ஏக்கரில் அமைய உள்ள இந்த விண்வெளி தொழிற்பூங்காவில் தொழில் வளர்ச்சி மட்டுமின்றி, இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு மையங்களும் அமைய உள்ளன.
ஸ்ரீஹரிக்கோட்டாவில் ஏற்கெனவே ராக்கெட் ஏவுதளம் இருந்தாலும் கூட ஏவுதளமும், விண்வெளி தொழிற்பூங்காவும் ஒரே இடத்தில் அமைய உள்ளதால் இந்திய விண்வெளித் துறையில் இது புரட்சியை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது தொடர்பாக ஈடிவி பாரத்திடம் பேசிய தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தூத்துக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் வளர்ச்சியின் அடுத்த கட்டத்தை எட்ட உள்ளதாக நம்பிக்கையுடன் தெரிவித்தார். இனி அவர் அளித்த பேட்டியை கேள்வி - பதில்களாக காணலாம்.
'விண்வெளி தொழிற்பூங்கா' - இந்த பெயரே கேட்பதற்கு மிகவும் வசீகரமாக உள்ளது. தமிழ்நாடு அரசு இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான நோக்கம் என்ன?
இந்திய விண்வெளி துறையின் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு முதன்மையானதாக இருக்க வேண்டும் என்பதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக உள்ளார். அவரது இந்த உயரிய நோக்கத்துக்கு செயல்வடிவம் தரும் விதத்தில், 'விண்வெளி தொழிற்பூங்கா' திட்டத்தை தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ளது. வளர்ந்துவரும் விண்வெளி துறையில், நவீன செயற்கைகோள்களுக்கான சர்வதேச சந்தை வாய்ப்பும் அதிகமாகவே உள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் நோக்கிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்திய விண்வெளிக் கொள்கை -2023 இன்படி, தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் அமைவுள்ள இஸ்ரோவின் புதிய ராக்கெட் ஏவுதளத்துக்கு அருகே இத்தொழிற்பூங்கா அமைய உள்ளது. இதன் மூலம், ராக்கெட்டுகளை ஏவும் நிறுவனங்களுக்கான திட்டச் செலவு பெருமளவு குறையும் என்பதுடன், இத்துறை சார்ந்து நிலவும் தளவாட ரீதியான தடைகள் உள்ளிட்டவையும் வெகுவாக குறையும். சர்வதேச அளவில் விண்வெளித் துறையில் தமிழ்நாடு முன்னணியில் திகழவும், இத்துறையில் இந்தியாவின் திறனுக்கு தமிழ்நாடு உந்துசக்தியாக விளங்கவும் தொழிற்பூங்கா முக்கிய காரணியாக இருக்கும்.
விண்வெளி தொழிற்பூங்கா, புதிய ராக்கெட் ஏவுதளத்தின் பயன்களை பெறுவதற்கான வாய்ப்புகள் என்ன?
தமிழ்நாட்டில் அமையவுள்ள இஸ்ரோவின் புதிய ராக்கெட் ஏவுதளத்துக்கு அருகாமையில் விண்வெளி தொழிற்பூங்கா அமைய உள்ளது. இரண்டு கட்டமைப்புகளும் ஒன்றையொன்று சார்ந்து பயனுள்ளதாக இருக்கும். அதாவது, ராக்கெட் உள்ளிட்ட விண்வெளி உபகரணங்கள் வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் பரிசோதனை என விண்வெளி ஆய்வுத் துறையின் முக்கிய கட்டங்களில், இத்தொழிற்பூங்கா தமது பங்களிப்பை செலுத்தும். அத்துடன் செயற்கைக்கோள்கள் மற்றும் அதன் கட்டுப்பாட்டு அறைக்கான உபகரணங்கள் வடிவமைப்பிலும் தொழிற்பூங்கா முக்கிய பங்கு வகிக்கும். இதன் பயனாக, விண்வெளி தொழிற்பூங்காவில் இடம்பெறும் நிறுவனங்கள், செயற்கைகோள்களை ஏவுவதில் தளவாட ரீதியான தடைகள் உள்ளிட்டவற்றை நீங்க பெற்று, அனைத்து ஒருங்கிணைந்த சேவைகளையும் ஒரே இடத்தில் பெறும் வாய்ப்பு உருவாகும். இதனால், விண்வெளித் திட்டங்களுக்கான நிறுவனங்களின் செலவு குறிப்பிடத்தக்க அளவு குறையும்.
விண்வெளி தொழிற்பூங்கா திட்டத்துக்கான முதலீட்டாளர்கள் யார்? உள்நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் ஏதேனும் தாமாக முதலீடு செய்ய முன்வந்துள்ளனவா?
தமிழ்நாட்டில் தொடங்கப்படவுள்ள விண்வெளி தொழிற்பூங்காவுக்கான முதலீட்டு வாய்ப்புகள் பிரகாசமாகவே உள்ளன. விண்வெளி துறையில் முதலீடு செய்யும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கி பாதுகாப்புத் துறை சார்ந்த பொதுத்துறை நிறுவனங்கள் வரை பல்வேறு நிறுவனங்களும் இத்திட்டத்தில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளன. இந்த உற்சாகம், இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தெள்ளத் தெளிவாக தெரிந்தது. அதன் பயனாக, Premier Explosives Ltd, Agnikul Cosmos போன்ற விண்வெளி துறைச் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்வதில் முன்னணியில் திகழும் நிறுவனங்களுடன், அம்மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தமிழக அரசின் தொழில் கொள்கை மற்றும் விண்வெளி திட்டங்களை செயல்படுத்துவதற்கான இடத் தேர்வு போன்ற அம்சங்கள், சர்வதேச விண்வெளி தொழில் நிறுவனங்களை ஈர்க்கும் விதத்தில் உள்ளன. குலசேகரப்பட்டினத்தில் அமையவுள்ள விண்வெளி தொழிற்பூங்கா, விண்வெளி கட்டமைப்பில் சர்வதேச அளவில் ஓர் மைல்கல்லாக அமையும் என்று உறுதியளிக்கிறேன்.
குலசேகரன்பட்டினத்துக்கு அருகே வாழும் உள்ளூர் மக்களுக்கு விண்வெளி தொழிற்பூங்கா எப்படி பயனுள்ளதாக அமையும்?
பிரெஞ்ச் கயானா, அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள விண்வெளி கடற்கரை பகுதியை போன்று, குலசேகரன்பட்டினத்துக்கு அருகே அமைய உள்ள விண்வெளி தொழிற்பூங்கா, உள்ளூர் சமூகத்தினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியாகவே இருக்கும். இப்பூங்காவின் வருகை மூலம் தூத்துக்குடி பகுதி மக்களின் பொருளாதார மற்றும் சமூக நிலை குறிப்பிடத்தக்க அளவு உயரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இத்தொழிற்பூங்கா புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், விண்வெளி துறை சார்ந்த கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி உள்ளிட்டவற்றையும் அளிக்க உள்ளது. இவற்றின் மூலம், தூத்துக்குடி மற்றும் அதன் அண்டை மாவட்டங்களின் பொருளாதாரம் செழிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அத்துடன் விண்வெளி ஆய்வில் அமெரிக்காவின் ஃபுளோரிடாவை போல, தூத்துக்குடியும் நமக்கான தனித்த கலாசாரத்துடன், விண்வெளி ஆய்வுகளுக்கான அடையாளமாக மாறும் என்றும் நம்புகிறோம்.
இதையும் படிங்க: குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி பூங்கா.. இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் கொடுத்த அப்டேட்