சென்னை: தமிழகத்தில் கோயில்கள் பாதுகாப்பு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில், இந்து சமய அறநிலையத் துறைக்கும், தமிழக அரசுக்கும் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் 75 வழிகாட்டுதல்களை பின்பற்ற உத்தரவிட்டது. இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது குறித்து இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கோயில்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கான ஒப்புதல்களை வழங்குவதற்காக, தொல்லியல் துறை நிபுணர்கள், ஆகம நிபுணர்கள் உள்ளிட்டோர் அடங்கிய மாநில அளவிலான நிபுணர் குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும், இக்குழுவினர் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களில் நேரடி ஆய்வுகள் மேற்கொண்டு, அதிகாரிகளுக்கு அறிக்கைகள் சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயில்களில் உள்ள புராதன சிலைகள் சேதம், நிதி விவகாரங்கள் தொடர்பாக தேவைப்படும் நேரங்களில் அரசின் அனுமதியைப் பெற்று மத்திய கணக்குத் தணிக்கை குழுவை கொண்டு தணிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், கோயில்கள் சொத்து குறித்து அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள், கடந்த 2021 ஜூன் முதல் இதுவரை 351 கோவில்களில் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளதாகவும், ஆய்வுக்காக அமைக்கப்பட்டுள்ள நான்கு பறக்கும் படைகளும், இதுவரை 179 கோயில்களில் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கோயில்கள் சீரமைப்பு மற்றும் பாதுகாப்புப் பிரிவு துவங்கப்பட்டுள்ளதாகவும், கோயில்கள் பராமரிப்புக்கும், விழாக்களுக்கும், ஊழியர்கள் ஊதியம் வழங்குவதற்காகவும் கோயில் நிதி பயன்படுத்தப்படுவதாகவும், உபரி நிதி, நிபந்தனைகளுக்கு உட்பட்டு பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள 13 ஆயிரம் கோயில்களில் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரசு மானியம், ஒரு லட்சம் ரூபாயில் இருந்து, 2 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், 2023 – 24 ம் ஆண்டில் கூடுதலாக 2 ஆயிரம் கோயில்கள் இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், தற்போது 17 ஆயிரம் கோயில்களில் ஒரு கால பூஜை திட்டம் அமல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023 ஜனவரி முதல் 2024 ஜனவரி வரை கோயில்கள் திருப்பணிக்காக அரசு மானியமாக 101 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள் பராமரிப்புக்காக 2024 – 25 ம் ஆண்டில் நூறு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கோயில் சொத்துக்கள் தணிக்கை செய்ய தனி இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், 17 ஆயிரத்து 962 கோயில்களில், நகைகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளதாகவும், கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் அளவீடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், கோயில் நிலங்களை ஆக்கிரமித்த 17,450 பேருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 2021 மே மாதம் முதல் 2024 மார்ச் வரையிலான காலகட்டத்தில் 5 ஆயிரத்து 812 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பிலான 6,324 ஏக்கர் நிலங்கள், 1,215 கிரவுண்ட் காலிமனை, 137 கிரவுண்ட் கோவில் குளங்கள், 186 கிரவுண்ட் பரப்பில் அமைந்துள்ள கட்டிடங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காணாமல் போன 1,424 சிலைகளில், 273 சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், சிலைகளை பாதுகாக்க அமைக்கப்பட்ட 23 மையங்களில்8,693 சிலைகள் பத்திரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கண்காணிப்பு கேமரா, அலாரம் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய உயர் பாதுகாப்பு அறைகள் கட்டுவதற்காக நிதி ஒதுக்கப்பட்டு 1,842 அறைகள் கட்ட டெண்டர் கோரப்பட்டு, 1,833 அறைகள் கட்டுமானத்துக்காக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு, 542 அறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கோயில் சிலைகள் திருட்டு, சொத்துக்கள் பெயர் மாற்றம் செய்த விவகாரங்களில் தொடர்புடைய அதிகாரிகள் 111 பேருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுதவிர, கோயில்களில் ஊழியர்கள் நியமனம், அவர்களுக்கான ஊதியம், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட பணப் பலன்கள் விவரங்கள் குறித்தும் விரிவாக அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.