சென்னை: தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு மாநில முன்னுரிமை மற்றும் 19 ஆண்டு கால கோரிக்கையான பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணி வழங்குவதற்கான விதிகளில் மாற்றம் செய்ததற்காக திருச்சியில் நன்றி தெரிவிக்கும் மாநாடு நடத்தப்படும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
திருச்சியில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் பொது செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் தலைமையில் மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில், தமிழக பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் தொடக்கக்கல்வி துறை ஆசிரியர்களுக்கு மாநில முன்னுரிமை மற்றும் 19 ஆண்டுகால கோரிக்கையான பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கும் வகையில் விதிகளில் மாற்றம் செய்று அரசாணை எண் 243 வெளியிட உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கும், துணை நின்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் நன்றி தெரிவித்தனர்.
பள்ளிக் கல்வித் துறையில் இதுவரை நிறைவேற்றப்பட்ட அரசாணை சமூக நீதியும் சமத்துவமும் கொண்ட திராவிட மாடல் அரசின் இந்த வரலாறு போற்றும் அரசாணையை வாழ்த்தி வரவேற்று மகிழ்கிறோம். தேர்தல் அறிக்கையில் தெரிவித்த படி 12 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் நலனை கருத்தில் கொண்டு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட தமிழக அரசை கேட்டுக்கொண்டனர்.
மேலும் இக்கூட்டத்தில், மத்திய அரசுக்கு இணையான ஈட்டிய விடுப்பு (El Surrender), ஆசிரியர்கள் பெறும் உயர்கல்விக்கு பழைய முறைப்படி ஊக்க ஊதியம், அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பணிக்கொடையினை தமிழ்நாடு அரசு வழங்கிட வேண்டும். மாணவர்களின் கல்வி நலன் கருதி அனைத்து உயர்நிலைப் பள்ளிகளிலும் 8 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உறுதி செய்ய வேண்டும்.
தொடக்கக்கல்வித் துறை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மேல்நிலை சார்நிலை விதிகளைத் திருத்தி நேரடி நியமனத்தில் 10 சதவீதம் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும். 51 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்த ஆசிரியர்களுக்கு உயர்கல்வி தகுதிக்கான ஊதிய உயர்வை ரத்து செய்து வெளியிட்டுள்ள அரசாணையை திரும்பப் பெற வேண்டும்.
தொடக்கக் கல்வித்துறை, பள்ளிக் கல்வித்துறையில் முன் அனுமதி பெறாமல் உயர்கல்விப் பயின்ற ஆசிரியர்களுக்கும், உதவிபெறும் பள்ளிகளில் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற ஆசிரியர்களுக்கும் சிறப்பு நிகழ்காக உயர்கல்விக்கான பின்னேற்பு அனுமதி அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித்தேர்வு தேவையில்லை என்பதை கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும்.
தொடக்கக்கல்வித் துறையிலிருந்து அலகு விட்டு மாறுதல், ஈர்த்துக்கொள்ளப்பட்ட ஆசிரியர்களின் மூதுரிமையை உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி தேர்வு வாரிய தர எண் அடிப்படையில் வழங்க வேண்டும். பள்ளிக்கல்வித் துணை ஆய்வாளர்கள், BRTE பணியிடங்களை முதுகலை ஆசிரியர் பணியிடங்களாக தரவு உயர்த்தி, பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வலியுறுத்தல்.
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்தில் 5 சதவீதம் தொடக்கக் கல்வித் துறை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குதல், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்புக்கான பணப்பலனை மீண்டும் வழங்கிடக் கோருதல், மாணவர்களின் கற்றல் மேம்பாடு கருதி ஆசிரியர் மாணவர் விகிதத்தினை முதல் வகுப்புகளுக்கு 1 ஆசிரியருக்கு 20 மாணவர்கள் எனவும், 9,10 வகுப்புகளுக்கு ஒரு ஆசிரியருக்கு 25 மாணவர் என்ற விகித்தில் நியமனம் செய்யப்பட வேண்டும்.
ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மேலும் தொடக்கக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர் பணி வழங்குவதற்கான அரசாணை வெளியிட்டதற்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு பிப்ரவரி 2வது வாரம் திருச்சியில் நடத்தப்பட உள்ளது என்றும், அதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், பள்ளிக்கல்வித்துறை செயலர், தொடக்கல்வி இயக்குநர் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திருப்பூர், திருவள்ளூர் எஸ்.பி உட்பட 11 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்..!