காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில், சென்னையின் 2வது விமான நிலையம் அமைய உள்ளது. இதற்காக பரந்தூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் நிலம் கையகப்படுத்துவதற்கு, பல்வேறு கிராமமக்கள் தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த விமான நிலைய அறிவிப்பு வெளியானதிலிருந்து, அப்பகுதியில் உள்ள கிராமமக்கள் ஒன்றிணைந்து அரசின் இந்நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், புதிய விமான நிலையத்திற்கான நிலம் கையகப்படுத்தும் அரசாணையை 2023, டிசம்பர் மாதம் தமிழ்நாடு அரசு வெளியிட்டது. இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள பொடவூர் கிராமத்தில் 32.04.05 சதுர மீட்டர் மற்றும் 2.77.76 சதுர மீட்டர் நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பை 2024, பிப்ரவரி மாதம் அரசு வெளியிட்டு இருந்தது.
இந்நிலையில், தற்போது காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள சிறுவள்ளூர் கிராமத்தில் 1.75.412 சதுர மீட்டர் நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பை அரசு இன்று (மார்ச் 12) வெளியிட்டுள்ளது.
நிலம் குறித்து பாத்தியதை உள்ளவர்கள் தங்களின் கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகளை 30 நாட்களுக்குள் தனி மாவட்ட வருவாய் அலுவலர், புதிய பசுமை வெளி விமான நிலைய திட்டம், மண்டலம் 1, பிளாட் எண் - 13 மற்றும் 14, திருப்பதி எஸ்டேட் எண். 59, திம்ம சமுத்திரம் கிராமம், காஞ்சிபுரம் மாவட்டம், என்ற முகவரியில் எழுத்து மூலமாக அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சேபனைகள் மீது ஏப்ரல் 30ம் தேதி விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னை - மைசூரு இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவை நாளை தொடங்கி வைப்பு!