மதுரை: திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் நில ஆக்கிரமிப்பு தொடர்பான மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், "கடந்த 2017ஆம் ஆண்டில் நில ஆக்கிரமிப்பு குறித்து தூவாக்குடி போலீசில் புகாரளித்தேன். அதன் அடிப்படையில் 3 பேர் மீது சப்-இன்ஸ்பெக்டர் நாகவள்ளி வழக்குப் பதிவு செய்தார். பின்னர் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதன்பின் தீபா என்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்றார். அவர் இந்த வழக்கை விசாரிப்பதற்குள் கியூ பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
இதற்கிடையே இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், விசாரணை அதிகாரியாக தீபாவின் கையெழுத்து இடம்பெற்று இருந்தது. இதனால், அவரை சாட்சியாக விசாரிக்க நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அந்த வழக்கை அவர் விசாரிக்கவில்லை. இந்த வழக்கில் எந்த ஒரு சாட்சியையும் விசாரிக்கவில்லை. குற்றப்பத்திரிகையில் எனது கையெழுத்தை வேறு யாரோ ஒருவர்தான் போலியாக போட்டு உள்ளனர் என மாவட்ட நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார்.
எனது புகாரின் பேரில் பதிவான வழக்கின் போக்கைத் திசை திருப்பும் வகையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கு விசாரணையை உள்ளூர் போலீசார் விசாரித்தால் உண்மை வெளிவராது என்பதால் சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: சாம்சங் துணை நிறுவன ஊழியர்கள் பணிநீக்கம்: போராட்டத்திற்கு அனுமதி வழங்கிய நீதிமன்றம்?
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, "அரிதிலும் அரிதான இந்த வழக்கினை மறுவிசாரணை நடத்த உத்தரவிடுவது அவசியம். முன்னதாக, மனுதாரர் வழக்கில் இறுதி அறிக்கை தயார் செய்தது யார்? விசாரணை அதிகாரி பெயரில் போலி கையெழுத்துப் போட்டது யார்? என்பதை கண்டறிய வேண்டியுள்ளது.
இதுகுறித்து மறுவிசாரணையின் போது விசாரிக்கப்பட வேண்டும். உண்மை வெளிச்சத்துக்கு வரும்போது, உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எனவே திருச்சி மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மனுதாரர் வழக்கு ரத்து செய்யப்படுகிறது. இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்படுகிறது. 2 வாரத்தில் வழக்கு ஆவணங்கள் அனைத்தையும் சி.பி.சி.ஐ.டி-யிடம் தூவாக்குடி போலீசார் ஒப்படைக்க வேண்டும்.
அதன்பேரில் சிபிசிஐடி மற்றும் கூடுதல் டிஜிபி சார்பில் இந்த வழக்கை விசாரிக்க ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும், அந்த அதிகாரி இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மறு விசாரணை நடத்தி, 3 மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், அதன்பேரில் இந்த வழக்கு சம்பந்தப்பட்ட நீதிமன்றம் விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும்" என உத்தரவிட்டார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்