சென்னை: சென்னை கிண்டி கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை புற்று நோய் மருத்துவர் கத்தியால் தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட விக்னேஷுக்கு ஜாமீன் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுத்து விட்டது.
சென்னை கிண்டி கலைஞர் பன்னோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவராக உள்ள பாலாஜியை, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது தாய்க்கு உரிய சிகிச்சை வழங்கவில்லை எனவும், நோயாளியை மிகவும் மோசமாக நடத்தியதாகவும் கருதி நவம்பர் 13ஆம் தேதி அவரது அறையில் நுழைந்த விக்னேஷ் என்ற இளைஞர், மருத்துவரை கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினார்.
மருத்துவமனையில் இருந்த காவலாளிகள், பொதுமக்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விக்னேஷ் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து அவரை கைது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்திருந்தனர். மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தற்போது, சிறையில் அடைக்கப்பட்டுள்ள விக்னேஷ் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "மக்கள் அதிகம் கூடும் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆயுதம் எடுத்து வந்து மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இது குறித்து அவரிடம் விசாரணை நடந்து வருவதால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது," என வாதிடப்பட்டது. காவல்துறை தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விக்னேஷின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.