சேலம்: சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரில் காதல் விவகாரத்தில், 16 வயது சிறுமியை கடத்திய தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் மற்றும் அவரின் 2 மகன்கள் என மூன்று பேரையும் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் அருகே ஆரியூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை, திருமலை சமுத்திரம் பகுதியை சார்ந்த மாயா (எ) சுபாஷ் காதலித்து வந்துள்ளார். ஆனால், அதில் சிறுமிக்கு சுபாஷின் காதலில் உடன்பாடு இல்லாமல் மறுத்து வந்ததாக தெரிகிறது. மேலும், சிறுமியின் பெற்றோரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சுபாஷ் தனது தம்பி சுசில்போஸ் மற்றும் தந்தை காத்தவராயன் ஆகியோரின் உதவியுடன் சிறுமியை வலுகட்டாயமாக காரில் கடத்தி சென்றதாக தெரிகிறது. சிறுமியை காணமல் தவித்த பெற்றோர் ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையும் படிங்க: வேலூரில் சிறுமி கூட்டுப் பாலியல் பலாத்காரம்: போக்சோவில் 3 பேர் கைது!
அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், சுபாஷ் உள்ளிட்டோர் சிறுமியை கடத்தி சென்றதை கண்டுபிடித்தனர். இதையடுத்து சுபாஷ் மற்றும் அவரது தந்தை உள்ளிட்ட மூவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், கடத்தப்பட்ட சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். பின்னர், சிறுமியை கடத்தியதாக மாயா சுபாஷ், சுகில் போஸ், காத்தவராயன் ஆகியோரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.