சென்னை: பொது சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆயிரத்து 127 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட ஆயிரத்து 21 மருத்துவர்கள் வரும் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடைபெறும் கலந்தாய்வில் தேர்வு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் நேற்று (பிப்.1) வெளியிட்ட செய்திக் குறிப்பில், "ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மருத்துவர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு நடத்தப்பட்டு, தகுதியானவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு செய்து முடிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், காலிப்பணியிடங்களை டிசம்பர் 2023-ல் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட உதவி மருத்துவ அலுவலர்களுக்கான (Assistant Surgeon) பொது கலாந்தாய்வு 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் எழும்பூர் நலவாழ்வு மற்றும் குடும்ப நலப் பயிற்சி மையத்தில் காலை 9.30 மணி முதல் நடத்தப்படும்.
இந்த கலந்தாய்வில் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட ஆயிரத்து 21 மருத்துவர்கள் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். இதையடுத்து, வரும் 6ஆம் தேதி காலை 9 மணி முதல் மருத்துவர்களுக்கு பணிநியமன உத்தரவானது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரால் வழங்கப்பட உள்ளது. மேலும், பொது கலந்தாய்வானது மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் நிர்ணயிக்கப்பட்ட முதுநிலை பட்டியலின்படி மட்டுமே நடத்தப்படும்.
இந்த கலந்தாய்வின் போது அனைத்து நபர்களும் தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் பணியில் சேர்வதற்கான உத்தரவு வழங்கப்பட்ட 15 நாட்களுக்குள் பணியில் சேர வேண்டும். எனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் தங்கள் மருத்துவ பணியாளர் தேர்வு வாரிய தர வரிசை விவரங்களையும் கலந்தாய்வில் கலந்து கொள்ள வரும் போது தவறாது சமர்ப்பிக்க வேண்டும்.
பொது சேவை வழங்குவதை உறுதி செய்தல் மற்றும் நிர்வாக காரணங்களால், சில மாவட்டங்களில் உள்ள அதிக காலியிடங்கள் மற்றும் சில இடங்களில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள காலியிடங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், காலியிடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. மேலும், மீதம் உள்ள காலியிடங்கள் விரைவில் முன்மொழியப்பட்டு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் அடுத்த தேர்வின் வாயிலாக நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
www.tndphpm.com என்ற இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஆயிரத்து 127 காலியிடங்களில் இருந்து மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் காலியிடங்களை தேர்வு செய்வர். அறிவிக்கப்பட்ட காலியிடங்களின் இருப்பிடங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தின் தொடர்பு விவரங்கள் www.tndphpm.com இல் பார்த்துக் கொள்ளலாம்.
அந்த வகையில், ஆரம்ப சுகாதார நிலையத்தைத் தேர்வு செய்வதற்கு முன், காலியிடங்களின் இருப்பிடங்களை சரிபார்க்க வேண்டும். கலந்தாய்வு நடைமுறையினை விரைவாக மற்றும் எவ்வித இடர்பாடும் இன்றி செயல்படுத்திட, தங்களுக்கான இடத்தினை தேர்ந்தெடுத்திட தயாராக வர வேண்டும்.
மேலும், விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வு மையத்திற்கு காலை 8:30 மணிக்கு வர வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் மருத்துவ பணியாளர் தேர்வு வாரிய முதுநிலை பட்டியலின்படி ஒருவர் பின் ஒருவராக, அவர்களின் விருப்ப இடத்தை தேர்வு செய்ய அழைக்கப்படுவர். அவ்வாறு அழைக்கப்படும் போது, ஒரு குறிப்பிட்ட நபர் இல்லையெனில், அடுத்த நபர் அழைக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தனியரால் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வே இறுதியானது. அதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்திற்கான நியமன உத்தரவானது முறையே வழங்கப்படும். நியமனத்தில் மாற்றம் ஏற்றுக் கொள்ளப்படாது, ஏனெனில் அதுவே இறுதியானது.
அந்த வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ளத் தவறினாலோ அல்லது கலந்தாய்வின்போது எந்த குறிப்பிட்ட இடத்தையும் தேர்வு செய்யவில்லை என்றாலோ, மருத்துவ பணியாளர் தேர்வு வாரிய விண்ணப்பத்தில் உள்ளபடி, அவர்கள் வசிக்கும் மாவட்டத்தின் அடிப்படையில் காலியிடங்களில் நியமன ஆணைகள் வழங்கப்படும்" என அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: “சாதி மதமற்றவர் சான்றிதழ் வழங்க அதிகாரம் இல்லை”.. தமிழக அரசு!