சென்னை: தீபாவளி பண்டிகை என்றாலே தமிழ்நாட்டில் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதே சமயம் புத்தாடைகள் உடுத்துவது, பட்டாசுகள் வெடிப்பது என பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுவார்கள். ஆகையால் பல்வேறு இடங்களில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைத்து விதவிதமான பட்டாசுகள் விற்பனை செய்யப்படுவதும் வழக்கம்.
இந்த நிலையில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைப்பதற்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,"தமிழகத்தில் வருகின்ற 31.10.2024 அன்று கொண்டாடப்பட உள்ள தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, வெடிபொருள் சட்டம் 1884 மற்றும் வெடிபொருள் விதிகள் 2008 -ன் கீழ், அனைத்து பகுதிகளில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோர், விதி எண் 84-ல் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி இணையதளம் (online) வழியாக தெரிவிக்கப்படுகிறது.
https://www.tnesevai.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்காலிக பட்டாசு உரிமம் பெற பிற மாவட்டங்களில் உள்ளது போல், இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கும் வழிமுறை சென்னை காவல் துறையின் மண்டலங்களான கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு, ஆவடி மற்றும் தாம்பரம் மண்டலங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தசரா பண்டிகை: திருச்செந்தூர், குலசேகரப்பட்டிணத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விரும்புவோர் அக்.19ஆம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதெனில், அல்லது தற்காலிக உரிம ஆணையையும், நிராகரிக்கப்பட்டதெனில், அதற்கான உரிமத்தை இணையதளம் வாயிலாகவே மனுதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அனுமதியின்றி உரிமம் பெறாமல் பட்டாசு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.