சென்னை: கிண்டி ரேஸ் கோர்ஸுக்கு குத்தகைக்காக வழங்கப்பட்ட 160 ஏக்கர் நிலத்துக்கு 730 கோடியே 86 லட்சம் ரூபாய் வாடகை பாக்கியை செலுத்தும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. வாடகை பாக்கியை செலுத்தத் தவறினால் ரேஸ் கோர்ஸ் நிர்வாகத்தை வெளியேற்றி, நிலத்தை சுவாதீனம் எடுக்கலாம் என்றும் அந்த நிலத்தை அரசு பொது பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் எனவும் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், இன்று காலை குத்தகையை ரத்து செய்து, தமிழ்நாடு அரசு நிலத்தை சுவாதீனம் எடுத்தது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ராஜசேகர் ஆகியோர் அமர்வில் முன்பு ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.
உடனடியாக இதை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்த நீதிபதிகள், இன்று காலை குத்தகையை ரத்து செய்து அரசு உத்தரவு பிறப்பித்த நிலையில், ரேஸ் கோர்ஸை காலி செய்ய அவகாசம் கொடுக்காமல், சுவாதீனம் எடுத்தது சட்டவிரோதமானது எனவும், அதற்கு நீதிமன்றம் துணை போகாது எனவும், இது அரசின் அத்துமீறல் எனவும் கண்டனம் தெரிவித்தனர்.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தான் நிலம் பயன்படுத்தியுள்ளதாகவும், எந்த ஒரு அனுமதியும் பெறாமல் அங்கு குதிரை பந்தயம் நடைபெறுவதாகவும், மண்டபம் நடத்தப்படுவதாகவும் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
பின்னர், அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ஒரே நேரத்தில் குத்தகையை ரத்து செய்து நிலத்தை சுவாதீனம் எடுக்கக் கூடாது எனவும், குத்தகை ரத்து குறித்து நோட்டீஸ் அளித்து காலி செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது என்பதால், காலி செய்ய அவகாசம் வழங்கும் வகையில் குத்தகை ரத்து செய்யப்பட்ட உத்தரவு குறித்து கடிதம் அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், குத்தகையை ரத்து செய்தது தொடர்பான நோட்டீஸ் வழங்கி, பின்னர் காலி செய்வதற்கான அவகாசம் கொடுத்த பின்பு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு