புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஜெகதாப்பட்டினத்தில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கான ஆய்வுப் பணிகளும் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்து இருந்தார். இந்நிலையில் விரிவான திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்ய ஒப்பந்தம் கோரியுள்ளது.
துறைமுகம் அமைப்பது குறித்து மீன்வளம், மீனவர் நலத்துறைக்குத் தேவையான தொழில்நுட்ப ஆய்வுகள் மற்றும் அனுமதி உள்ளிட்ட விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிப்பதற்கு ஆலோசகரை நியமிக்கும் வகையில் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் வகையில், தேவைப்பட்டால் அப்பகுதி கடற்கரை ஆழப்படுத்தப்பட்டு, கடல் அரிப்பைத் தடுப்பதற்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும் என்றும், ஐஸ் ஆலை, குளிர்பதனக் கிடங்கு, நவீன ஏலக்கூடம், வலை உலர்த்தும் கொட்டகை உள்ளிட்ட ஒருங்கிணைந்த வசதிகளுடன் ஜெகதாப்பட்டினம் துறைமுகம் அமையும் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே, சென்னை, கடலூர், தேங்காய்பட்டணம், முட்டம், சின்ன முட்டம், குளச்சல், பூம்புகார், முகையூர் ஆகிய 6 துறைமுகங்கள் செயல்பட்டு வரும் நிலையில் 7வது துறைமுகமாகப் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் துறைமுகம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'ராமர் கல்' பஞ்சாயத்து... ராமேஸ்வரம் கோதண்டராமர் கோயிலில் 5 வருட பிரச்னை தீர்ந்தது! - Kodandarama Temple Rameswaram