சென்னை: இன்று (ஆக.15) இந்திய நாட்டின் 78வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி, சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அதன் பின்னர் அவர் ஆற்றிய சுதந்திர தின உரையில், "விடுதலையைப் பாடுபட்டு பெற்றுக் கொடுத்த தியாகிகளைப் போற்றுவோம். அவர்களின் குடும்பத்தினருக்கு நன்றியைத் தெரிவிப்போம். எந்த நோக்கத்துக்காக அவர்கள் போராடினார்களோ, அந்த நோக்கம் நிறைவேற எந்நாளும் உழைப்போம் என்று இந்நாளில் உறுதி ஏற்போம்.
வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்ல, சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும். பொருளாதாரம், கல்வி, சமூகம், சிந்தனை, செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒருசேர வளர வேண்டும். அதுதான் பெரியாரும், அண்ணாவும், கருணாநிதியும் காண விரும்பிய திராவிட மாடல் வளர்ச்சி.
கடந்த மூன்றாண்டு காலத்தில் தமிழ்நாடு அடைந்த வளர்ச்சியை நீங்கள் பார்த்தால், அது ஒரே ஒரு துறை வளர்ச்சியாக இல்லாமல் பல்துறை வளர்ச்சியாக அமைந்திருக்கும். அந்த வகையில், மகளிர் முன்னேற்றத்துக்கான திட்டங்கள், காலை உணவுத் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டம், நான் முதல்வன் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
நமது மாணவர்கள் அனைவரும் தங்கள் கல்வித் தகுதிக்கேற்ப நல்வேலைவாய்ப்புகளைப் பெற்று, வறுமை இல்லாத, சமத்துவம் வாய்ந்த, ஓர் அறிவார்ந்த தமிழ்ச் சமுதாயத்தை உருவாக்க வேண்டும். உலக அளவில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு விளங்க வேண்டும். மத்திய அரசின் தரவுகளின்படி வெளியான ஒரு புள்ளிவிவரத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில் அமைப்பு சார்ந்த தனியார் துறைகளில் 77 லட்சத்து 79 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள் திராவிட மாடல் அரசால் உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தவிர்த்து, இந்த அரசு பொறுப்பேற்ற கடந்த மூன்று ஆண்டுகளில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகிய தேர்வு வாரியங்கள் மூலமாக 32 ஆயிரத்து 774 நபர்களுக்குப் பல்வேறு அரசுத் துறைகளில் நேரடிப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், உள்ளாட்சி அமைப்புகள், அரசுத் துறை நிறுவனங்கள் போன்ற பல்வேறு அரசு அமைப்புகளில் 32 ஆயிரத்து 709 இளைஞர்கள் பணிநியமனம் பெற்று, கடந்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் 65 ஆயிரத்து 483 இளைஞர்களுக்கு அரசுப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டும் அல்லாது, வரும் 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும்" என பேசினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: ஜிப்லைன் மூலம் ஆற்றைக் கடக்கும் போது அந்த நொடி.. கல்பனா சாவ்லா விருது பெற்ற செவிலியர் சபீனா பிரத்யேக பகிர்வு!