சென்னை: சென்னையில் நடைபெற்ற 75ஆவது குடியரசு தின விழாவில் வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் மக்களின் உயிரைக் காப்பாற்றிய சிறுவன் டேனியல் செல்வசிங், யாசர் அராபத், வட்டாட்சியர் சிவக்குமார் ஆகியோருக்கு அண்ணாப் பதக்கம் வழங்கப்பட்டது.
அதாவது, ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அரசு சார்பில், வீர தீர செயல்கள் புரிந்த அரசு ஊழியர்கள், பொது மக்களுக்கு வீர, தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்படுகிறது. இப்பதக்கம் பெறுபவர்களுக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையும், ரூ.9 ஆயிரம் மதிப்புள்ள தங்க முலாம் பூசிய பதக்கம் மற்றும் சான்றிதழும் வழங்கப்படுகிறது.
தற்போது, சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே நடைபெற்ற 75ஆவது குடியரசு தின விழாவில் இவ்வாண்டுக்கான வீர, தீர செயலுக்கான அண்ணா பதக்கங்களைத் தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் சிங்கித்துறையை சேர்ந்த யாசர் அராபத், திருநெல்வேலி மாவட்டம் டேனியல் செல்வசிங், ஸ்ரீ வைகுண்டம் வட்டாட்சியர் சிவக்குமார் ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கினார்.
விருது பெற்ற தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம், சிங்கித்துறையை சேர்ந்த யாசர் அராபத் கூறும்போது, "தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் கடந்த மாதம் பெய்த கன மழையினால் வரலாறு காணாத வெள்ளம் மற்றும் காட்டாற்று வெள்ளம் தூத்துக்குடியில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனால் கடம்பா குளத்திற்கு கீழ் உள்ள பல்வேறு குளங்களில் இருந்து பாய்ந்தோடிய மழை வெள்ளம் திருச்செந்தூர் வட்டம், தண்ணீர்ப் பந்தல் கிராமத்தையும் மூழ்கடித்தது.
அந்த கிராமத்தில் உள்ளவர்கள் சுமார் 250 பேர் தண்ணீரில் சிக்கித் தவித்தனர். அவர்களை மீட்கத் தனியார் அமைப்புகள், அரசு அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில், காயல்பட்டினம், சிங்கித்துறையைச் சேர்ந்த எனது தலைமையில் 16 மீனவர்கள் ஒரு குழுவாக இணைந்து மீட்டுப் பணியில் ஈடுபட்டோம்.
தண்ணீர்ப் பந்தல் கிராமத்தில் உள்ள மக்களை எங்களின் படகில் சென்று மீட்டோம். அப்போது எனக்கு விருது கிடைக்கும் என நினைக்கவில்லை. என்னுடன் சேர்ந்து மீட்புப்பணியில் ஈட்டுப்பட்ட மற்றவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.
திருநெல்வேலியைச் சேர்ந்த டேனியல் செல்வசிங் கூறும்போது, "திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த கனமழை மற்றும் மற்றும் தாமிரபரணி வெள்ளத்தினால் திருநெல்வேலி மாநகரின் பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. இந்நிலையில் திருநெல்வேலி டவுன் தடிவீரன் கோவில் கீழத்தெருவும் வெள்ள நீரால் சூழப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வீடுகளில் வசிக்கும் பொதுமக்களுக்குப் பால் பாக்கெட், ரொட்டி பாக்கெட், மருந்துகள் ஆகியவற்றைத் தண்ணீரில் நீந்திச் சென்று கொடுத்தேன். எனது கழுத்தளவிற்குத் தண்ணீர் தேங்கி இருந்த போதும் மற்றவர்களுக்காக வாங்கி வந்து தந்தேன்" என தெரிவித்தார்.
இது குறித்து டேனியல் செல்வசிங் தாய் கூறும்போது, "தண்ணீர் கழுத்தளவிற்கு இருந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் பாதுகாப்பாக நீந்திச் சென்று வாங்கி வந்து தரக் கூறினோம். மேலும் மற்றவர்களுக்கு உதவிட வேண்டும் என்ற எண்ணமும் வந்துள்ளது" என தெரிவித்தார்.
வீரதீர செயலுக்கான விருது பெற்ற ஸ்ரீ வைகுண்டம் வட்டாட்சியர் சு.சிவக்குமார் கூறும்போது, "தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த அதிதீவிர கன மழையினால் வரலாறு காணாத வகையில் ஏற்பட்ட தாமிரபரணி ஆற்று வெள்ளம் மற்றும் காட்டாற்று வெள்ளம், தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.
ஸ்ரீ வைகுண்டம் வட்டத்திற்குட்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரையிலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள 14 கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டோம். கிராமங்களில் ஒவ்வொரு வீடாகச் சென்று தாமிரபரணியில் வெள்ளம் வரப்போவதாகவும், உடனே வீடுகளை விட்டு வெளியேறுமாறும் கூறி அவர்களை வாகனங்களில் ஏற்றிப் பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தோம்.
மேலும் அவர் நேரடி துரித கண்காணிப்பில் சுமார் 2 ஆயிரத்து 400 பேர் மீட்கப்பட்டனர். தொடர்ந்து 3 நாட்கள் பொதுமக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டோம். இதற்காகத் தமிழ்நாடு முதலமைச்சர் விருது வழங்கியுள்ளார். இது மகிழ்ச்சியாக இருக்கிறது. மேலும் இதுபோன்று தொடர்ந்து பணியாற்ற ஊக்கத்தை அளிக்கிறது" என தெரிவித்தார்.
கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் 2024:
தமிழ்நாடு அரசு, மத நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டு உயிர்நீத்த திருகோட்டை அமீர் அவர்களின் பெயரால் கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் என்ற பதக்கத்தினைத் தோற்றுவித்து, ஆண்டுதோறும் மத நல்லிணக்கத்திற்காகச் சிறந்த சேவையாற்றி வரும் ஒருவருக்கு அப்பதக்கத்தை வழங்கி வருகிறது. இப்பதக்கம் பெறுபவர்களுக்குப் பதக்கமும், ரூ.25 ஆயிரத்திற்கான காசோலையும் மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக் கோட்டை வட்டம், தளி பஞ்சாயத்து, உருது பள்ளி தெரு என்ற முகவரியில் வசித்து வரும் முகமது ஜூபேர் என்பவர் மத நல்லிணக்கத்திற்காகப் பல்வேறு பணிகளை ஆற்றி வருகிறார்.
முகமது ஜூபேர் Alt News என்ற பெயரில் இணையதளத்தைத் தொடங்கி, சமூக ஊடகங்களில் வெளிவரும் செய்திகளின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து உண்மையான செய்திகளை மட்டும் தனது இணையதளத்தில் வெளியிட்டு மக்களுக்குத் தொடர்ந்து அளித்து வருகிறார். அவரது இந்த பணியானது பொய்யான
செய்தியினால் சமூகத்தில் ஏற்படும் வன்முறைகளைத் தடுக்க உதவி வருகிறது.
கடந்த 2003ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாட்டில் தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவிய காணொளி காட்சிகளின் உண்மைத் தன்மையைச் சரிபார்த்து சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளி காட்சிகள் தமிழ்நாட்டில் நடைபெற்றது அல்ல, oreogyeorgy All News Bonweer grombepoohm எதிரான வதந்தி பரப்பி வருவதைத் தடுத்து, தமிழ்நாட்டில் சாதி, மத, இன மற்றும் மொழியினால் ஏற்படும் வன்முறைகள் நிகழாத வண்ணம் செயல்பட்டுள்ளார்.
இவ்வாறு, மத நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டு வரும் முகமது ஜூபேர் அவர்களைப் பாராட்டும் வகையில், இவருக்கு 2024ஆம் ஆண்டிற்கான கோட்டை அமீர் மத நல்லிணக்கத்திற்கான பதக்கத்தைத் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கி கௌரவித்துள்ளார்.