சென்னை: தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளதைத் தொடர்ந்து வாக்காளர்களுக்குப் பணம் வினியோகம் செய்வதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாகக் கவனம் செலுத்தி வருகிறது. தேர்தல் கட்டுப்பாடுகள் தமிழகம் முழுவதும் அமலில் இருக்கும் நிலையில் தீவிர வாகனச்சோதனை நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பரிசுப் பொருட்களும் பல கோடி ரூபாய் கணக்கில் வராத பணமும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்குத் தகவல் அளித்த தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, “தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக இதுவரை 88.12 கோடி ரூபாயும், 4.53 கோடி ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நிறைவடைந்தாலும், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஆவணம் இல்லாமல் கையில் ரொக்கமாக வைத்திருந்தால், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4ம் தேதி வரை பறிமுதல் செய்யப்படும். அதேபோல், விக்கிரவாண்டி தொகுதி காலியாக இருப்பதாக மாவட்ட தேர்தல் அதிகாரி கொடுத்த அறிக்கை இந்தியத் தேர்தல் ஆணையத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து இந்தியத் தேர்தல் ஆணையம் முடிவு செய்யும். நாடாளுமன்றத் தேர்தலுக்காக இன்று (ஏப்.8) காலை 11 மணி வரை 2 கோடியே 8 இலட்சத்து 59 ஆயிரத்து 559 கோடி வாக்காளர்களுக்கு (33.46% ) பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது. தாம்பரத்தில் 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாகத் தேர்தல் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தேர்தல் நேரத்தில் ஒரு கோடிக்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டால் அது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளச் சிறப்புக் குழு அமைக்கப்படும். அதன்படி செலவின பார்வையாளர் விசாரணை அறிக்கையைச் சமர்ப்பித்ததும், இந்தியத் தேர்தல் ஆணையம் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கும்” என கூறினார்.
இதையும் படிங்க: "கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் அரசியலமைப்பு சிதைக்கப்பட்டுள்ளது" - பிரின்ஸ் கஜேந்திரபாபு! - Lok Sabha Election 2024