சென்னை: தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைப்பெற உள்ளது. சென்னை தலைமைச்செயலகத்தில் வருகிற 8 ஆம் தேதி காலை 11.00 மணியளவில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைப்பெறுகிறது.
‘உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகவும், செந்தில் பாலாஜி, கோவி செழியன், நாசர், ராஜேந்திரன் ஆகிய நான்கு பேர் புதிய அமைச்சர்களாகவும் பொறுப்பேற்றுள்ள நிலையில் நடைப்பெற உள்ள அமைச்சரவை கூட்டம் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களுக்கு துறை சார்ந்த அறிவுறுத்தல்கள் இக்கூட்டத்தில் வழங்கப்படும் என தெரிகிறது.
தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்ய உள்ள நிறுவனங்களுக்கு அமைச்சரவை கூட்டம் மூலமாக அனுமதி அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தமது சமீபத்திய அமெரிக்க பயணம் மூலமாக மூதலீடுகளை ஈர்த்து வந்துள்ள நிலையில், தமிழகத்தில் தொழில் துவங்க உள்ள நிறுவனங்களுக்கு அமைச்சரவை கூட்டம் மூலமாக அனுமதி அளிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.