சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25 ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். மொத்தம் 36 பக்கங்கள் கொண்ட பட்ஜெட்டில் பல முக்கிய நலத்திட்ட அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடருக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறும்போது, “காலத்துக்கு ஏற்ப மக்களுக்கு ஏற்ப அழகாக வடிவமைத்துக் கொடுத்திருக்கும் நிதிநிலை அறிக்கையைக் காங்கிரஸ் வரவேற்கிறது. இதற்கு மேல் இந்த நிதிநிலை அறிக்கையில் எதுவும் செய்ய முடியாது. தமிழ்நாட்டிற்கு நிதியைத் தராமல் அடாவடித்தனம் செய்கிறார் மோடி.
தமிழகத்திற்கு உரியத் தொகையை அளிக்காமல், உத்தரபிரதேசத்துக்கு ஜிஎஸ்டி பணத்தைத் திரும்பக் கொடுத்து மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. நீங்கள் பணம் கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை தமிழ்நாட்டு மக்களை நாங்கள் பாதுகாப்போம் என இந்த நிதி நிலை அறிக்கை பல இடங்களில் சுட்டிக்காட்டி உள்ளது.
தொடர் இயற்கை பேரிடரால் ஏராளமான இழப்புகள் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளன. பேரிடர் நிதியிலிருந்து மத்திய அரசு இதுவரை நிதி அளிக்கவில்லை. மத்திய அரசு துரோகம் செய்கின்றது. பாஜக அரசு தமிழ்நாட்டு மக்களைப் புறக்கணிக்கிறது. இதற்குத் தேர்தலில் மிகப்பெரிய பாடத்தைப் புகட்டுவார்கள். மத்திய அரசு இருந்து உரிமைத் தொகையைத் தர முடியவில்லை என்றாலும் தமிழக அரசின் நிதியை வைத்துச் செப்பனிடப்பட்ட பட்ஜெட்டை கொடுத்துள்ளனர்.
அவருக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு உதவி பெறும் பள்ளிகளையும் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கையை ஏற்றுச் சிறுபான்மை நிறுவனங்களுக்கும் உதவித் தொகை நீடிக்கப்படும் என்று அறிவிப்பு வரவேற்கத்தக்கது. பல துறைகளில் நிதியைக் கூடுதலாகக் கொடுத்துள்ளார்.
நான் முதல்வன் திட்டம், இல்லம் தேடி கல்வி, பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை, காலை உணவுத் திட்டம் எனப் பல திட்டங்களைச் செயல்படுத்தி தமிழ்நாடு பல துறைகளில் இந்தியாவுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறது. பாஜகவினரால் உண்மையைப் பேச முடியாது. பிரதமர் வீட்டு வசதி திட்டத்திற்கு 2011ல் கணக்கெடுக்கப்பட்டது.
அதில் இறந்தவர் பெயரை நீக்க முடியவில்லை. புதிய பயனாளிகளைச் சேர்க்க முடியவில்லை. பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்குத் தமிழக அரசு 65 சதவீதம் நிதி கொடுக்கிறது. ஆனால் அதற்குப் பெயர் பிரதமர் வீடு கட்டு திட்டம் எனக் கூறுகின்றனர்" என்றார்.
இதையும் படிங்க: தொடரும் அரசியல் கட்சியினரின் வாகன அட்ராசிட்டி…கொங்கு நாடு வேட்டுவ கவுண்டர் சமூக நீதி மாநாட்டில் கட்சியினர் அலப்பறை!