சென்னை: நடப்பாண்டிற்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் கடந்த 12ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இந்நிலையில் இன்று 2024 - 2025ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார். நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இதுவாகும்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் தாக்கல் செய்யும் பட்ஜெட் என்பதால் பல முக்கிய நலத்திட்ட அறிவிப்புகள் பட்ஜெட்டில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அதில், “சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்சியை ஊக்குவிக்கும் வகையில், முதல் தலைமுறை தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் (NEEDS) வரும் நிதியாண்டில் 101 கோடி ரூபாய் அளவில் மானிய உதவி அளிக்க நிதி ஒதுக்கப்படும். மேலும், சிறு குறு நிறுவனங்களுக்கு சரியான நேரத்தில் அவர்களுக்குரிய தொகை அளிக்கப்படுவதை உறுதிசெய்ய மின்னணு வர்த்தக வரவுகள் தள்ளுபடி (TReDS) தளத்தில் பெரும்பான்மை பொதுத்துறை நிறுவனங்கள் இணைவது உறுதி செய்யப்படும்.
மூன்றாண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட சிறப்பு முயற்சிகளின் விளைவால் புத்தொழில் நிறுவனங்கள் (Startups) அமைவதற்கான உகந்த சூழலை உருவாக்குவதில் நாட்டிலேயே தலைசிறந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த வெற்றியைத் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கத்தில், உலகின் முன்னணி புத்தொழில் நிறுவனங்களும் இளம் தொழில்முனைவோர்களும் கலந்துகொள்ளும் வகையில் உலக புத்தொழில் மாநாடு (Global Startup Summit) சென்னையில் நடத்தப்படும்.
சமூக மேம்பாடு குறித்த தேவைகள், காலநிலை மாற்றம், அரசுத்துறை சார்ந்த சேவைகள் குறித்தான தீர்வுகளை உருவாக்கவும், அவற்றை செயல்படுத்தக் கூடிய ஆர்வமும் ஆற்றலும் மிக்க தொழில்முனைவோர்களைக் கண்டறிந்து அந்நிறுவனங்களுக்குத் தேவையான வளங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்திட பெரியார் சமூகநீதி புத்தொழில் வளர்மையம் உருவாக்கப்படும். சமூகத்தில் விளிம்புநிலையில் வாழும் மக்கள், பட்டியலின மற்றும் பழங்குடியினரால் தொடங்கி நடத்தப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு இந்த மையம் முன்னுரிமை அளிக்கும்.
தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் (TANSIDCO) திண்டுக்கல்லில் ஒட்டன்சத்திரம் வட்டம், சிவகங்கையில் மானாமதுரை வட்டம், திருவாரூரில் திருத்துறைப்பூண்டி வட்டம் ஆகிய இடங்களில் 80 ஏக்கர் பரப்பளவில், ரூ.32 கோடி மதிப்பீட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கான மூன்று புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும். இதன்மூலம் 3 ஆயிரம் நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
கோயம்புத்தூர் மாவட்டம் குறிஞ்சி தொழிற்பேட்டையில், குறுந்தொழில் முனைவோர் உடனடியாக தொழில் துவங்க ரூ.37 கோடி மதிப்பீட்டில், 12 ஏக்கர் பரப்பளவில் 4 அடுக்குகள் கொண்ட அடுக்குமாடி ஆயத்த தொழில் வளாகம் (Plug and Play) தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் கட்டப்படும். இதன்மூலம் ஆயிரம் நபர்களுக்கு நேரடியாகவும் 500 நபர்களுக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.
மதுரையில் ரூ.24 கோடி மதிப்பீட்டில், 26 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவில் தொழில் புத்தாக்க மையம் அமைக்கப்படும். தொழில்துறையில் புத்தாக்கத்தை ஊக்குவிக்கவும், தொழில்நுட்பம் சார்ந்த புத்தாக்க நிறுவனங்களை மேம்படுத்தவும் இம்மையம் உதவிடும். இம்மையத்தில் புத்தொழில் தொடங்குபவர்கள் (Startups) கூட்டாகப் பணிபுரியும் வசதி மற்றும் தொழில் 4.0 உபகரணங்கள், தயாரிப்புகள் மேம்பாட்டு மையம், முன்மாதிரி தயாரிப்பு வசதி (prototyping) மற்றும் பயிற்சி நிலையம் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படும்.
மேலும், மதுரை மாவட்டத்திலுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்முனைவோர்களுக்கு உதவும் வகையில், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் சக்கிமங்கலம் தொழிற்பேட்டையில் ரூ.118 கோடி மதிப்பீட்டில், 5 ஏக்கர் நிலப்பரப்பில் மூன்று அடுக்குகள் கொண்ட அடுக்குமாடி தொழில் வளாகம் கட்டப்படும். இதன் மூலம் 4 ஆயிரத்து 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.
குறுங்குழும மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், விருதுநகர் மாவட்டம் வெள்ளயாபுரத்தில் ஆயத்தஆடை உற்பத்திக்கும், செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் சித்த மருத்துவ மூலிகைப் பொருட்கள் தயாரிப்பிற்கும், கன்னியாகுமரி மாவட்டம் அழகியபாண்டியபுரத்தில் ஆயத்தஆடை உற்பத்திக்கும், சேலம் மாவட்டம் இராக்கிப்பட்டியில் பட்டுநூல் உற்பத்திக்கும், நாமக்கல் மாவட்டம் கத்தேரியில் துணிநூல் வார்ப்பிற்கும், புதுக்கோட்டை மாவட்டம் இராங்கியத்தில் ஆயத்தஆடை உற்பத்திக்கும் 6 குறுங்குழுமத் திட்டங்கள் தமிழ்நாடு அரசு மானியத்துடன் 25 கோடி ரூபாய் மொத்த மதிப்பீட்டில் பொது வசதி மையங்களுடன் அமைக்கப்படும்.
நீலகிரி மாவட்டத்தைச் சார்ந்த சிறு தேயிலை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, 16 கூட்டுறவுத் தேயிலை உற்பத்தி தொழிற்சாலை உறுப்பினர்களால் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பசுந்தேயிலைக்கு கிலோவிற்கு 2 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். சுமார் 27 ஆயிரம் சிறு தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில் இதற்காக 9 கோடி ரூபாய் செலவிடப்படும்” என அறிவித்துள்ளார். மேலும், இந்த வரவு-செலவு திட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைக்கு ரூ.1,557 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு பட்ஜெட் 2024: மகளிருக்கான முக்கிய அறிவிப்புகள் என்ன?