திருநெல்வேலி: திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் போட்டியிடுகிறார். முன்னதாக திருநெல்வேலி தொகுதி திமுக-வுக்கு ஒதுக்கப்படும் என உள்ளூர் திமுக முக்கிய நிர்வாகிகள் பெரிதும் பார்த்தனர்.
குறிப்பாகத் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் கிரகாம்பெல், தற்போதைய எம்.பி ஞானதிரவியம், சட்டப்பேரவை தலைவர் (சபாநாயகர்) அப்பாவுவின் மகன் அலெக்ஸ் அப்பாவு உள்படப் பலர் திருநெல்வேலி தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்பட்டு தங்களுக்குப் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில், முக்கிய நிர்வாகிகள் பலர் சீட் கேட்டதால், திமுக தலைமை வீண் பிரச்சினை வேண்டாம் எனக் கருதி திருநெல்வேலி தொகுதியைக் காங்கிரசுக்கு ஒதுக்கியதாகக் கூறப்பட்டது.
இதனிடையே எம்.பி சீட் கிடைக்காது என்ற அதிருப்தியில் சபாநாயகர் அப்பாவு உட்படப் பல திமுக நிர்வாகிகள், தேர்தல் பணி செய்யாமல் ஒதுங்கி நிற்பதாகப் பரபரப்பு தகவல்கள் வெளியானது. இந்த சூழ்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் பிரச்சாரத்தின் போது, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று (ஏப்.3) செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், திருநெல்வேலி மக்களவை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியதிலோ, எனது மகனுக்கு சீட் கொடுக்காததாலோ எனக்கு எந்த வருத்தமும் இல்லை.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொகுதிப் பங்கீடு, தேர்தல் பணி, குறித்து பல்வேறு முடிவுகளை எடுக்கலாம். திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட 44 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். திருநெல்வேலி தொகுதியில் மிகப்பெரிய ஜாம்பவான்கள் இருக்கும் போது கடந்த சில மாதங்களுக்கு முன் மாணவரணிச் செயலாளராகி உள்ள எனது மகனுக்குப் போட்டியிட வாய்ப்பு அளித்தால் அது எப்படிச் சரியாகும்?.
எனது மகனுக்கு சீட் கொடுக்க வேண்டும் என்று திமுக தலைவரைச் சந்தித்து அழுத்தம் கொடுக்கக் கூடிய அளவில் விபரம் இல்லாதவன் இல்லை நான். யார் கொடுத்த அழுத்தம் காரணமாக இது போன்ற செய்தி அவதூறாகப் பரப்பப்படுகிறது என்று எனக்குத் தெரியவில்லை. இந்தியா கூட்டணி அமைவதற்குப் பிதாமகனே திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தான். பிரதமருக்கு எதிராக மிகப்பெரிய கூட்டணியை அமைத்தவர் திமுக தலைவர் தான். மஞ்சள் பத்திரிக்கை எழுதுவது போன்று தன்னை பற்றி அபத்தமாக எழுதியுள்ளனர்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: காங்கிரஸ் வேட்பாளர் பிரச்சாரத்தில் அக்கட்சிக் கொடியும் இல்லை.. நிர்வாகிகளும் இல்லை - நெல்லையில் நடப்பது என்ன? - Parliamentary Election Campaign